பாட்டலி சம்பிக்க ரணவக்க

பாட்டலி சம்பிக்க ரணவக்க

“ஜனாதிபதி கோட்டாபய மனதை தயார்படுத்த வேண்டும்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

“அதிகாரத்தை விட்டுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போதாவது மனதை தயார்படுத்த வேண்டும். அதிகார போட்டி காரணமாக தாமதமாகி வரும் உத்தேச 21வது அரசியலமைப்புத் திருத்தத்தை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாடலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் போராட்டங்கள் ஓய்ந்துள்ளதாக அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும்.  21ஆவது திருத்தச் சட்டத்தை தாமதப்படுத்துவது அரசாங்கத்தையும், நாட்டையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும்.

ஜனாதிபதியைச் சுற்றியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை தாமதப்படுத்துவது தவறாகும். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அதனை நிறைவேற்ற துரிதப்படுத்த வேண்டும் வேண்டும்.

சர்வதேச உதவியை நாட வேண்டுமானால், அதற்கு ஏற்றாற்போல் எமது செயற்பாடுகளை சரிசெய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.

 

“ஜூன் மாதம் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி உருவாகும்.” – எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க !

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .

 

“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.

இதனால் கடந்த 9 ஆம் தேதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

“ராஜபக்சவினரை காட்டிலும் புலிகளின் தலைவர் பிரபாகரனே பரவாயில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

முப்பது ஆண்டுகள் போரில் இருந்து நாட்டை விடுவித்ததாகக் கூறிய ராஜபக்சவினர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான பேரழிவைத் தேடி தந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே சம்பிக்க ரணவக்க இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஆழிப்பேரலை அனர்த்தத்தை விட மிக மோசமான அனர்த்தம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. அரசில் இருக்கும் பலரும், ராஜபக்சவினருக்கு வாக்களித்தவர்களும் இந்த அழிவைப் புரிந்துகொண்டுள்ளனர். நாட்டை மிக மோசமான நிதி நெருக்கடி நோக்கிக் கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் என்பது உலகத்துக்குத் தெளிவாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகி பல மாதங்கள் முக்கிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது. இதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது” – என்றார்.

“தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை.” – சம்பிக்க ரணவக்க

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது. 10 ஆண்டுகளிற்கு பின்னரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ன நிலைப்பாடு இருக்கின்றது. உள்ளக வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வரும் இவர்கள் விசேடமாக விவசாயிகள் உரம் தொடர்பாக பாதிக்கப்படுகின்றனர்.

அதேவேளை கொவிட்ட நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது.

இனம், மதம், சமயம் என்ற பிரிவினைகளிற்கு அப்பால், அனைத்து இலங்கை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் காஸ், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இந்த நேரத்தில் அனைத்து மக்களும் ஒன்றாக வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும். பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், பாராளுமன்றில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும், ஒட்டுமொத்தமாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஒன்றாக செயற்படுகின்றோம்.

பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம் என அவர் இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்திருந்தார்.

“இந்த அரசாங்கம் இலங்கை மக்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.