2020 Parliament election

2020 Parliament election

வெளியானது முதலாவது தேர்தல் முடிவு – காலியில் பெரமுன ஆதிக்கம்!

2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற பொது தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி இதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசிய கட்சி -1,507

இலங்கை பாராளுமன்ற தேர்தல் சில முக்கிய விடயங்கள் !

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளது.

காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்ததோடு, தேர்தல் பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்றது, 16,263,885 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறிய 520 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • நாளை காலை நாளை (06) வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • காலை 07.00 மணிக்கும், 08.00 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
  • பொதுத் தேர்தலின் முடிவுகள் பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகும்.  
  • தேர்தலின் இறுதி முடிவு ஓகஸ்ட் 06 வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படவுள்ளது.
  • விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஓகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்.
  • அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 08 சனிக்கிழமையன்று வர்த்தமானியில் வெளியிடப்படும்.
  • ஓகஸ்ட் 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் தேசிய பட்டியல்கள் தொடர்பான அறிவித்தல் வெளியாகும்.
  • பொதுத் தேர்தல்கள் 2020 தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஓகஸ்ட் 10 திங்கட்கிழமைக்குள் வர்த்தமானியில் வெளியாகும்.

முதல் தேர்தல் முடிவு 2.30 க்கு பின்னரே..! – மஹிந்த தேசப்பிரிய 

பாராளுமன்றத்தேர்தலுக்கான வாக்டிகெடுப்புக்கள் நேற்றையதினம் முடிவடைந்த நிலலயில் இன்று  வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று பிற்பகல் 2.30க்கும் 3.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட ரீதியில் வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை – மஹிந்த தேசப்பிரிய

இலங்கையின் 2020 பாராளுமன்றத்தேர்தலானது இன்று காலை 07 மணியிலிருந்து மாலை 05 மணி வரை நடைபெற்றிருந்தது. இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொவிட் 19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டிந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தல் இடம்பெற்றதன்  காரணமாக 10 மணித்தியாலங்கள் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பல மாவட்டங்களில் வாக்களிப்பு விகிதம் 70 % விட அதிகரித்திருந்தது.

இம்முறை குருணாகலை, காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான வாக்குகள் பதிவாகியிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், சுகாதார வழிகாட்டலை தயாரித்து தந்து ஆரோக்கியமான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு ஆதரவினை பெற்றுத் தந்த சுகாதார பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கள்ளவாக்கு பதிவு !

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையில் 8025 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (05.08.2020) காலை 06 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியில் 421 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2020 பாராளுமன்ற வாக்களிப்பில் மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் வெளியானது! – வன்னியில் 73% வாக்களிப்பு.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மிகுந்த பாதுகாப்புடனும் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பாக்கப்பட்டதை விட மக்களுடைய வரவு சிறப்பாக காணப்பட்டதாக பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதே நேரத்தில் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிடைத்திருக்கக் கூடிய தகவல்களின் படி  இன்று காலை 07 மணி முதல்  மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
கொழும்பில் 72%
திகாமடுல்லையில் 72%
மட்டக்களப்பில் 72%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
அனுராதபுரத்தில் 71%
கேகாலையில் 71%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
காலியில் 69%
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

என்ற வகையில் மக்களின் வாக்களிப்பு வீதம் காணப்படுகின்றது.

வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாதோருக்கான அறிவித்தல்!

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்றும்(4.08.2020) நாளையும் (5.08.2020)தபால் அலுவலங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரதேச தபால் அலுவலகத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வாக்காளர் அட்டை இல்லாவிடினும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னர் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3,069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்  பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்குழு

நாளைய தினம் (05.08.2020) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4.05.2020) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்கின்ற பணி ஆரம்பமானது. 12,985 வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர். இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்.