வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

மியன்மாரில் இராணுவப்புரட்சியின் எதிரொலி – பொருளாதார தடை விதிக்க நேரிடும் – ஜோபைடன் எச்சரிக்கை !

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மியன்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது:-

மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்.  நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது.

மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016-ம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.

இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல் !

இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது.  இதனால்,  பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது.  இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.
தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன.  இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன என கூறியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் காந்தி சிலை உடைப்பு – அமெரிக்கா கண்டனம் !

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சிலையில் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகள் உடைக்கப்பட்டு இருந்தன.

காந்தி சிலை உடைப்பு குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது:-

காந்தியின் நினைவுச் சின்னங்கள் இழிவுப்படுத்துவது குறித்து நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம். இந்த செயலை கண்டிக்கிறோம். இது தொடர்பாக விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

டேவிஸ் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து அழிப்பு உள்ளிடக்கிய எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கள் சமூகம் பலவிதமான பார்வைகள் மற்றும் மதிப்புகளை பிரதிபலிக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட மத்திய பூங்காவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கண்டன கூட்டம் நடத்தினர்.

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் !

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

“இராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சான் சூசி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூசியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

S'poreans in Myanmar advised to remain vigilant amid military coup: MFA -  Mothership.SG - News from Singapore, Asia and around the world

இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ ஆட்சி வரலாறு:

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூசி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூசி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆங் சான் சூசிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

“ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை விடுதலை செய்யக்கோரி மக்கள் போராட்டம் – 5000 க்கும் மேற்பட்டோர் கைது !

ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி , கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் திகதி நவால்னி ரஷ்யா திரும்பினார். மாஸ்கோ விமான நிலையம் வந்த அவரை மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் கைது செய்தனர். நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் நவால்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வார இறுதியில் ரஷ்யாவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் பரோல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நவால்னியை விடுவிக்க கோரியும் ஜனாதிபதி புதின் பதவி விலகக்கோரியும் கடந்த 2 நாட்களாக ரஷ்யாவில் எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி ரஷ்யா முழுவதும் ஆதரவாளர்கள் போராட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் இருக்கும் மாஸ்கோவின் லுபியங்கா சதுக்கத்தில் முதலில் போராட்டம் நடத்த நேற்று நவால்னி ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் போராட்டம் அருகில் உள்ள தெருக்களுக்கு மாற்றப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆயிரக்கணக்கானோர் புதின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது. ரஷ்யாவின் மற்றொரு பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்துக்கு அணி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த நகரங்களை பாதுகாப்பு படையினர் முடக்கினார்கள். மேலும் அங்கு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரஷ்யாவில் அமைதியாக போராடும் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ரஷ்ய அதிகாரிகள் செயல்படுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்தை ரஷ்யா நிராகரித்தது. ரஷ்யாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும், ரஷ்யாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

மியன்மாரில் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் – சிறையிலடைக்கப்பட்டார் ஆங் சான் சூகி !

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
Making war and law - Myanmar's army blocks constitutional reforms | Asia |  The Economist
இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
மியான்மரில் ராணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. மியான்மர் ராணுவம் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.

“இவ்வருட இறுதியில் இங்கிலாந்தில் பறக்கும் கார்களைக் கொண்ட விமான நிலையம் ” – இங்கிலாந்து திட்டம் !

இங்கிலாந்தின் நகர்ப்புற மையங்களில் எயார் டாக்ஸிகள் எவ்வாறு செயற்படும் என்பதை நிரூபிக்கும் நோக்கில், இந்த ஆண்டின் பிற்பகுதியில், பறக்கும் கார்களைக் கொண்ட விமான நிலையத்தைக் கட்டமைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

கோவன்ட்ரி நகரில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்திற்கான செயற்திட்டம் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப், அர்பன்-எயார் போர்ட், கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டருடன் கூட்டு சேர்ந்து பறக்கும் கார்கள் வானத்தையும், மக்களையும் பொருட்களையும் சுற்றிச் செல்லும்போது தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.

நவம்பர் முதல், கோவென்ட்ரிக்கு வருபவர்கள் ஒரு பறக்கும் கார் விமான நிலையம் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் மற்றும் செயற்பாட்டு மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (ஈ.வி.டி.ஓ.எல்) வாகனத்தை லேண்டிங் பேடில் காணலாம்.

கோவென்ட்ரி நகர மையத்தில் விமான நிலையத்தை தற்காலிகமாக நிறுவுவதற்கு நிதியளிப்பதற்காக 1.2 மில்லியன் பவுண்டுகள் (1.65 மில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

“பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” – பிரித்தானியா அறிவிப்பு !

பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது.

இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் (29.01.2021) அறிவித்திருந்தன.

இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்று முதல்(31.01.2021) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பின்னர் ஹொங்கொங்கில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவுடன் வாதங்களை முன்வைத்துள்ளன.

1997ஆம் ஆண்டில் காலனி மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளை சீனா மீறுவதாக பிரித்தானியா தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர் சிறப்பு விசாவானது, மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும் அவர்கள் சார்ந்திருப்பவர்களையும் நாட்டுக்குள் ஈர்க்கலாம் என பிரித்தானிய அரசு கணித்துள்ளது.

கடந்த ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளவர்கள் பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வாழவும், படிக்கவும், வேலை செய்யவும், இறுதியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது.

இதேவேளை, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டுத் திட்டம் 1987ஆம் ஆண்டில் பிரித்தானிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தாகும் என்பதுடன் இது குறிப்பாக ஹொங்கொங்குடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் இருந்து மெக்ஸிக்கோவுக்கு சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி இறக்குமதி !

பெப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தூள்ளார்.
இதற்காக மெக்ஸிகோவும் அஸ்ட்ரா ஜெனெகாவும் ஒப்பந்தம் போட்டுள்ளன. அதே சமயம் பெப்ரவரி 10ம் திகதி முதல் மெக்ஸிகோவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாகிஸ்தான் வான்வெளியில் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமாக தென்பட்ட பறக்கும் மர்மப்பொருள் ” – வேற்றுக்கிரகத்து பறக்கும் தட்டா ? என அச்சம் !

பாகிஸ்தானில் கடந்த 23-ந் தேதி முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையேயான வான்வெளியில் அசாதாரணமான ஒரு பொருள் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை தனது விமானி ஒருவர் கண்டதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. அது பிற கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என வதந்தி பரவியது.

இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விமானி தனது விமானத்தில் இருந்து 1000 அடி உயரத்திலும், தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்திலும், அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு அதை படம் பிடித்துள்ளார். அவர் உண்மையில் கண்டது என்ன என்பதை உடனடியாக சொல்லி விட முடியாது. இதுகுறித்து அந்த விமானி அறிக்கை அளித்துள்ளார். அதே நேரத்தில் அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். இது பற்றி நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி ஜியோநியூஸ் கூறுகையில், “மாலை 4.30 மணியளவில் விமானியால் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமான தெரிந்தது” என தெரிவித்துள்ளது.

இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.