வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளம்!

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பல வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகள் சரிந்துள்ளதால், பலர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்திற்குப் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றுஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

பால்க் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 10க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆபிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது ! – உலக சுகாதார அமைப்பு தகவல்.

போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆபிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆபிரிக்கா  முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு போலியோவுக்கு மருந்து கிடைக்குவரை இந்த நோய் உலகம் முழுவதும் பரவலாக இருந்தது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு முதல்உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

அப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இளம்பிள்ளைவாதத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கவலைப்படும்படியான வகையில், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.

டைப்-1 என்றழைக்கப்படும் போலியோ வைரஸ் பற்றியது இந்த எச்சரிக்கை. 2018-ல் 28 பேருக்குத்தான் போலியோஅறிகுறி தென்பட்டது. ஆனால், 2019-ல் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தானில் மட்டும் 128 பேரிடம் போலியோ வைரஸ் டைப்-1 கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கு இருப்பது தெரிந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தானுக்கு இந்த வைரஸ் கடத்தப்பட்டிருப்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சுற்றுப்புறங்களிலும் இந்த வைரஸ்கள் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் : உலகளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.65 கோடியாக உயர்வு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கட்டுப்பாடற்ற வகையில் மிக வேகமாக பரவி வருகின்றது..  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில்  உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,65,99,377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,40,50,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் 6தாக்குதலுக்கு இதுவரை 8,23,278 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66,27,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    • அமெரிக்கா       –       பாதிப்பு -5,955,728,        உயிரிழப்பு – 182,404 ,  குணமடைந்தோர் – 3,254,282
    • பிரேசில்              –       பாதிப்பு – 3,674,176,      உயிரிழப்பு – 116,666 ,  குணமடைந்தோர் – 2,848,395     
    • இந்தியா             –       பாதிப்பு – 3,231,754,      உயிரிழப்பு –  59,612,     குணமடைந்தோர்  -2,467,252
    • ரஷியா               –       பாதிப்பு –  966,189 ,       உயிரிழப்பு –  16,568 ,     குணமடைந்தோர்  – 779,747
    • தென்ஆப்பிரிக்கா – பாதிப்பு –  613,017 ,       உயிரிழப்பு – 13,308 ,      குணமடைந்தோர்  – 520,381
    • பெரு                  –        பாதிப்பு –  600,438,         உயிரிழப்பு –  27,813 ,    குணமடைந்தோர்  –  407,301
    • மெக்சிகோ      –        பாதிப்பு –  568,621,         உயிரிழப்பு –  61,450,     குணமடைந்தோர்  – 393,101     
    • கொலம்பியா –         பாதிப்பு –  562,128 ,        உயிரிழப்பு -17,889 ,       குணமடைந்தோர்  – 395,470

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் !

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேருக்குப் புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 75.92 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 24.24 சதவீதம் மட்டுமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 848 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு சதவீதம் 1.84 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 212 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் உடல் நலக்குறைவுக்கான பின்னணியில் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ! – ஜேர்மனி.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜேர்மன் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான 44 வயதான அலெக்ஸி நவல்னி, கடந்த வியாழக்கிழமை, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து நவால்னி விமான நிலையத்தில் பருகிய தேநீரில் நச்சு கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர். மேலும் அதன் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதியின் அலுவலகம் இருக்கலாம் என்றும் கூறினர்.

மேலும் அவரை ஜேர்மனிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பும்படி கோரப்பட்டபோதும் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறி ரஷ்ய மருத்துவமனை அவரை ஜேர்மனிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.

இந்த நிலையில், நவாக்னி விடயத்தில் தலையிட்ட ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர் ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதேநேரம், நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலை ரஷ்ய மருத்துவர்கள் மறுத்து, அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை முன்பே இருந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை குறைந்ததால்தான் அவர் மயக்கமடைந்துள்ளார் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ஜேர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நவால்னியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளரான ஸ்டெபென் சீபர்ட்,  “நவால்னிக்கு யாரோ விஷம் வைத்துள்ளார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்ததற்கு ஏற்கனவே ரஷ்ய வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன. ஆகவே, உலகம் இந்த விடயத்தை மிகவும் உற்றுநோக்குகிறது.

அத்துடன் நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது அவசியமாகிறது” என மேலும் குறிப்பிட்டார்.

ஜோ பைடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்” டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.

துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும், துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பும், மைக் பென்ஸும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முறைப்படி குடியரசுக் கட்சி இருவரையும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளராக நேற்றுதான் அறிவித்தது.

வரும் 27-ம் தேதி ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அப்போது ஜோ பிடன் இதற்கு முன் கூறிய குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மிகவும் பழமையான கட்சி என்று அழைக்கப்படும் குடியரசுக் கட்சி தன்னுடைய அறிவிப்பைக் காணொலி மூலம் நேற்று நடத்தியது. நார்த் கரோலினா நகரில் உள்ள சார்லோட்டி நகரில் சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் குடியரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள் பங்கேற்று ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பையும், துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸையும் மீண்டும் தேர்வு செய்தனர். அப்போது நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:

“நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமெரிக்க வரலாற்றில் இருக்கும். இந்த தேசம் மிகக் கொடுமையான திசையில் செல்லப் போகிறதா?  அல்லது சிறந்த பாதையில் செல்லப்போகிறதா?  என்பதை முடிவு செய்யும் தேர்தல். எதிர்க்கட்சியினர் என்ன செய்கின்றனர் என்பதை என்னுடைய ஆதரவாளர்கள் சிறிது அமைதியாகக் கவனிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள், இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறார்கள். இது தேசத்துக்கே அவமானம்.

அவர்கள் இப்போது செய்யத் துணிந்திருக்கும் வாக்குகளைத் திருடுவது என்பது மிகவும் ஆபத்தானது. லட்சக்கணக்கான வாக்குகளைத் திருடுகிறார்கள். இருப்பினும் தேர்தலில் நான்தான் வெற்றி பெறுவேன்.
எங்களிடம் மிகப்பெரிய அளவுக்கு உற்சாகம் இருக்கிறது, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றுவோம் எனும் சாதனை இருக்கிறது. ஆனால், குடியரசுக் கட்சியினரிடம் எந்தவிதமான உற்சாகமும் இல்லை.

நவம்பர் மாதம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் ஜனாதிபதியானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். கொரோனாவைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியைத் தேடிக்கொள்ள ஜனநாயகக் கட்சியினர் முயல்கிறார்கள்.

சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நம்முடைய தேசம் ஒருபோதும் சோசலிஸ்ட் நாடாக இருக்காது”.

இவ்வாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார்.

இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சில் உருவாக்கம் !

இந்திய மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது.

மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019இன் (2019இன் 40 வது சட்டம்) பிரிவு 16இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 21 ஆகஸ்ட் 2020 தேதியிட்ட அறிவிக்கையின்படி மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை உருவாக்கியுள்ளது.

மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். அதேபோன்று சமூக நீதி, அதிகாரம் அளித்தல் இணையமைச்சர் துணைத்தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.

இந்த தேசியக் கவுன்சிலானது கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும்:

(அ) மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்,

(ஆ) மாற்றுப் பாலினத்தவருக்கு சமநிலை மற்றும் முழுபங்கேற்பு கிடைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்,

(இ) மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசுத்துறைகள் மற்றும் அரசு, அரசு சாராத நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

(ஈ) மாற்றுப் பாலினத்தவரின் குறைகளைத் தீர்த்து வைத்தல்

(உ) மத்திய அரசு பரிந்துரைக்கின்ற இத்தகைய ஏனைய செயல்களை நிறைவேற்றுதல்

பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசியப் பெண்கள் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல் சாராத உறுப்பினர்களைத் தவிர தேசியக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்.

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் , உடல் சிலையில் முன்னேற்றம் எதுவுமில்லை ! – டெல்லி இராணுவ மருத்துவமனை

இந்தியாவின்  முன்னாள் ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப், சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி இராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர கடும் பிரயத்தனம்!

அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்  நடக்கவிருக்கிறதுகிறது. ஜனாதிபதி  ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி  ட்ரம்ப் இந்திய பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடியும் ட்ரம்பும் அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடியின் உரை அடங்கிய அந்த வீடியோ ட்ரம்ப் தேர்தல் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதே நிலையில் முன்னதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை கவர  ஜனநாயகக் கட்சி  ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, ஞானத்தால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்” என்று பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இங்லாந்துக்கு எதிரான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிப்பு !

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து- – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் எதிர்வரும் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ம் திகதிகளில் மான்செஸ்டரில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்ட பிறகு சர்ப்ராஸ் அகமது முதல்முறையாக 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத்துக்கு அணியில் இடம் கிட்டவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

பாபர் அசாம் (தலைவர்), பஹார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.