உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவுடன் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம்..?

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.

எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாகவும் இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா என நாங்கள் சந்தேகிக்கிறோம். பெரும்பான்மை மக்களின் கோரிக்கையின்படி அரசாங்கத்தை வெளியேற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில் சில இரகசியத்தன்மை இருப்பதாக நான் உணர்கிறேன்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது அதற்கு எதிராக பேசுகிறார். சர்வகட்சி அரசாங்கத்தில் யார் பிரதமராக வருவார்கள் என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவதே எங்களுக்கு விருப்பம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது.” – அமெரிக்க தூதுவரிடம் யாழ் மறைமாவட்ட ஆயர் முறைப்பாடு !

எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான்  அமெரிக்க தூதுவரிடம்  தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார். முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்டவர்கள். நாங்கள் அஹிம்சை வழியில் போராடினோம். அதற்குக் கிடைத்தது அடியும் உதையும். அடக்குமுறையை எதிர்த்து ஆயுத வழியில் முப்பது வருடம் போராட்டம் இடம்பெற்று அதுவும் தவறி விட்டது. ஆகவே இனி என்ன செய்வதென்று தெரியாமல் இறைவனிடம் மன்றாடுகிறோம்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களிடம் கூறினேன். ஒற்றுமை என்பது எமது அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் கிடையாது. பதவி தமது பரம்பரை சொத்து என்பது போல் அவர்கள் செய்யப்படுகின்றனர். ஏனையவர்கள் முன் வருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதுவே அவர்களது குணமாக இருந்தது” என்றார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதி உதவி !

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ காந்தா அறிவித்துள்ளார்.

மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

‘கவலைப்படாதீர்கள் – நான் பதவி விலக மாட்டேன்.’ – பிரதமர் மகிந்த

நான் ராஜினாமா செய்ய மாட்டேன். கவலைப்பட வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடனை அடைக்க மீண்டும் சீனாவிடமிருந்து புதிய கடன் !

கடன் மறுசீரமைப்பை விரும்புவதில்லை என்றும், ஆனால் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்க சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்திற்க் கொண்டு, அந்த நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“ஒரு நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பை அனுமதிப்பது, பல நாடுகளுக்கு கடன்களை வழங்குவதால், அது ஏனைய நாடுகளை பாதிக்கும் என்பதே சீனாவின் நிலைப்பாடு. எனவே, தற்போதுள்ள கடனை அடைக்க மற்றொரு கடனுக்கு முன்மொழிந்துள்ளனர். இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது, நிதியமைச்சர் உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் விவாதிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

“எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை !

“நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

“நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக,  பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீர்ப்பது தொடர்பில் 04.20.2022ஆம் திகதியிடப்பட்டு எனக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதம் தொடர்பில்

நீங்கள் முன்பு எனக்கு அனுப்பிய, அதாவது ஏப்ரல் 4, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நான் எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்பதை முதலில் மரியாதையுடனும், அன்புடனும் ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் சுட்டிக் காட்டியது போல், நாட்டில் ஏற்பட்டுள்ள உடனடி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தினசரி, புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களின் உதவியுடன் நான் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, வீட்டு எரிவாயு மற்றும் பல்வேறு எரிபொருள்கள் வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, என்னால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர், மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளர் ஆகியோர் சர்வதேச நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், சம்பந்தப்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் நட்பு நாடுகளுடனும் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக, “சர்வதேச நாணய நிதியம்” மற்றும் இந்திய அரசு ஏற்கனவே நேர்மறையான பதிலை அளித்துள்ளதுடன், மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடுத்த சில வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் சில வாரங்களில் தற்காலிக தீர்வுக்கு செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்க சட்ட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்கள்:

ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் டி சில்வா – தலைவர்

ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

நீதிபதி திரு. ஏ. டபிள்யூ.ஏ. சலாம்

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மனோகார டி சில்வா

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சமந்த ரத்வத்தே

பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்

பேராசிரியர் டபிள்யூ. செனவிரத்ன

ஜனாதிபதி சட்டத்தரணி திரு. நவீன் மாரப்பன

திருமதி கௌசல்ய மொல்லிகொட – செயலாளர்

இந்தக் குழு சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாடி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைவுகளை தயாரித்து வருகின்றது. அந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டு  நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் குழு எனக்கு தெரிவித்துள்ளது.

இவ்வாறாக தயாரிக்கப்பட்ட வரைபு கிடைக்கப்பெற்றவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரைவின் நகலை உங்களுக்கு அனுப்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நான் ஆதரவளிப்பதாகவும், பாராளுமன்றத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து அத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்புகளை எதிர்பார்த்து அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும், அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தூய்மையான எண்ணத்துடன் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது.  இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது அழைப்பு அவ்வாறே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் என்ன செய்தாலும், அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பிற்குள் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, உங்களது முன்மொழிவுகளையோ அல்லது மக்களின் அபிலாஷைகளையோ நானோ அல்லது எமது அரசாங்கமோ எக்காலத்திலும் புறக்கணிக்கமாட்டோம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

அமைச்சரவை இல்லாமல் ஒரு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியாது. மேலும், அமைச்சரவை இல்லாதது நடைமுறைச்சாத்தியமற்றது. அதன்படி, மூத்த அமைச்சர்களின் உதவியுடன் பெரும்பான்மையான இளம் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நான் நியமித்தேன்.

மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்காக குறுகிய காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன என்பதை நான் மரியாதையுடன் குறிப்பிடுகிறேன்.

எனது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றில் நான் தடியடியோ, கண்ணீர்ப்புகையோ பிரயோகிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எனது அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை / ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன்.

19.04.2022 அன்று பொதுமக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் இது குறித்து முறையான விசாரணை நடத்த பல குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணைகள் முடிந்தவுடன் அதுபற்றி உங்களுக்கு அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் கூறியது போல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் உங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மரியாதையுடன் எதிர்பார்க்கிறேன்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், எமது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நீங்கள் முன்மொழிந்தால், எனது முழு ஆதரவையும் வழங்குவேன் என்பதை நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறு IMF வலியுறுத்தல் !

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறும் வரிகளை உயர்த்துமாறும் கோரியுள்ளது.

இலங்கை நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் Anne Marie தெரிவித்துள்ளார்.

முக்கியமான செலவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த வார இறுதியில் இலங்கைப் பிரதிநிதிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை !

மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (திங்கட்கிழமை) விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் தலைமையில் கடந்த மே 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலை நினைவு கூர்ந்து கிரான் கடற்கரையில் சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தனர்.

இந்நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உட்பட 10 பேரை கல்குடா பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி 10 பேரையும் அவர்களை தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் பிணையில் விடுவித்தார். குறித்த 10 பேருக்குமான வழக்கு நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவர்கள் அனைவரையும் நீதவான் இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து தீர்ப்ளித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா !

இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட வீசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த பொறிமுறையின் கீழ் குறிப்பிட்ட நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்களுக்கு, அவர்களுடைய துணைவருக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா வழங்கல்

• இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் ´தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்´ எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.

இலங்கைக்கு 125 மில்லியன் ரூபா அவசர உதவி !

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளில் உள்ள விநியோக பிரிவின் ஊடாக நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.