இலங்கைத் தமிழர்களது எதிர்காலம் – ரவி சுந்தரலிங்கம்

SL_Tamils_Stop_&_Search - Photo_London Metroபாகம் 1
வன்னியன் பிரபாகரன்
புலிகளின் ஆட்சிக் காலம்

இலங்கையின் சரித்திரத்தில் 13ம் நூற்றாண்டு முக்கிய பாகத்தை வகிக்கின்றது என்றால் மிகையாகாது. 11ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாகி சுமார் 150 வருடங்களாக இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்ட பொலநறுவ இராட்சியம் கலிங்க மன்னன் மாஹாவின் படையெடுப்புடன் முற்றுக்கு வந்த காலம் இது. இனிமேல் தென்புலம் தம்பலேனியா என்றும், இதுவரை “உத்தரதேச” என்றழைக்கப்பட்டு வந்த வடக்குப் பிரதேசம் யாழ்அரசாகவும் உருவெடுக்க மத்திய பகுதியில் ‘வன்னி’ என்ற பெயருடன் பல சிற்றரசுகள் (principalities) தோன்றின. அவற்றை ஆண்டவர்கள் பொதுவாக தமிழ் பேசுவோராக இருந்தமையும் “வன்னியர்” என்ற பொதுப் பெயரும் ஒரு இனத்தவர் என்ற தோற்றத்தைக் கொடுப்பினும் அவர்களது பாரம்பரிய தொடர்புகள் வேறுபட்டவையாகவே இருந்தன. மட்டக்களப்பு புத்தள வன்னியரகள் கேரளப் பிரதேசத்தின் முக்குவருடனும், திருகோணமலை யாப்பாணப்பட்டின வன்னியர்கள் தமிழ்நாட்டு சைவத்-தமிழர்களுடனும் தொடர்பானவர்களாக அமைய வடமத்திய பிரதேசத்து வன்னியர்கள் வேடர்களாகவும் சிங்களவர்களாகவும் இருந்தனர்.

16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெள்ளையர்களது காலனித்துவத்தை சந்திக்கும்வரை சிங்களத் தேசத்தில் தமிழ்நாட்டு மன்னர்களது உதவிகளுடன் ஆட்சிகள் கைமாறியபடி இருந்தபோதும் யாழ்அரசும் வன்னி இராட்சியங்களும் பொதுவாக தாக்குபிடித்தபடி இருந்தன. பின்னர் காலனித்துவத்தில் 250 வருடங்களைக் கடந்தபின் அரசமைப்பு ரீதியில் இலங்கைத் தீவு ஒருங்கிணைக்கப்பட்டபோது உடமைகள் உரித்துகள் பற்றிய சர்ச்சைகள் எழுவது எதிர்பார்க்க வேண்டியதே. இவ்வாறான பண்டைய போர்வழியில் தமிழரின் இராசதானிகளை மீட்டெடுப்பதே அரசியற் போராட்டம் என்ற கருத்துடன் 30 ஆண்டுகளாக போர்புரிந்த புதிய வன்னியத்தின் தலைவன் பிரபாகரன் என்று கூறவதில் யாரும் பொறாமையோ ஆத்திரமோ கொள்ளமாட்டார்கள் என்பது கணிப்பு. ஏனெனில், அதே வழியில்தான் இன்று யாழ் பிரதேசத்தையும் திருமலையையும் மட்டக்களப்பையும் வன்னிப் பிரதேசத்தையும் தமதெனப் கோரி கொலைகளைச் செய்து அரசஅநுசரணைக்காக தம்மிடையேயும் போரிடுகிறார்கள் புதியவன்னியர்கள். இவ்வாறு எமது உபதலைப்புக்கான விளக்கம் அமைய நாம் தொடர வேண்டிய விடயங்கள் வேறு.

இதேவேளை, தமிழர்கள் என்றோர் இனம் இலங்கையில் உண்டா? இல்லை வன்னியர்கள் மட்டக்களப்பார் வடமராட்சியார் தென்மாராட்சியார் என்றென்ன சாதியத்தால் ஒடுக்கப்பட்டோர் எல்லோரையும் உள்ளடக்கிய “டாய்லித்துகள்” என்றும் ஒரு புதிய இனம் கூட உண்டா என்றெல்லாம் விசாரித்து எமது 30 வருட போராட்டத்தில் தமிழர்கள் என்ற இனத்திற்கு என்னானது என்று அங்கலாய்ப்பவர் பலர். இவற்றைவிட மூன்று இலட்சத்துக்கு மேலான எமது மக்கள் அரச முகாங்களுள் அடைக்கப்பட்டு அவஸ்தையில் வாழாதுவாழ்ந்து இறந்தும் கொண்டுள்ளனரே அவர்கள் கதி என்னாவது? மற்றவர் விலங்குகளில்லாத கைதிகளாக வாழ்கிறார்களே அவர்கள் நிலை வேறுபட்டதா, அல்லது முகாங்களில் இருப்பவர்களின் எதிர்கால மாதிரிகளா? இப்படி மக்களையும் அவர்களது எதிர்காலம் பற்றியும் ஏங்குபவர் கேள்விகள் ஒருபுறம் அமைய ‘தமிழீழப் போர்’ என்னாது என்ற கேள்வி மற்றும் சிலரை இன்னமும் ஐயத்தில் உள்ளாக்குகிறது.

சிறீ லங்காவுக்கு எதிராக போரில் ரைத்தானிக் (Titanic) போன்ற புலிகளால் முன்நின்று நடத்தப்பட்ட போர் முடிந்துவிட்டதா திரும்பவும் தொடருமா? அல்லது இவ்வளவுகாலமும் புலிகளால் தந்த விளக்கங்களின் கடற்பரப்பில் பனிமலைகளாய் தெரிய அகச் சூழல்களின் மனத்தாக்கங்கள் கப்பலின் நங்கூரம் போலாக எமது மக்களது எதிர்காலம் பனிச்சூழலில் சிக்குண்டே போய்விடுமா? என்றவாறு “இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் என்ன?” என்பது பலத்த கேள்வியாக எழுவது நியாயமானதே. இக்கேள்வியின் அடித் தளத்தில் புதைந்து கிடக்கின்றன மேலும் எத்தனையோ கேள்விகள் சந்தேகங்கள்.

மிகவும் துன்பங்கள் தோய்ந்த மனங்களுடன் நேற்றைய உணர்வுடனே வாழும் எமக்கு ஆதங்கங்களோ பல, ஆனால் விளக்கங்களை தரக்கூடய தகவல்களோ சில. ஆதலால் ஐம்புலன்களில் கொண்டுள்ள நம்பிக்கையிலும் பார்க்க ஆறாவதைக் கொண்டே கணிப்புகள் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது போகிறது. அரைகுறைத் தகவல்களுடன் ஆரோக்கியமான பதில்களைத் தருவது சாத்தியமானதல்ல. அப்போது முன்கூட்டியே கூறியவை சரியாக பரிணமிக்கும்போது ஞானிகளாகிடும் நாம் பின் வரப்போவதெல்லாம் சரியாக அமைந்திடும் என் திடத்தினை ஏற்றுவிடுவோமாகின் ஏமாற்றத்திலேயே மிதப்போம்.

எனவே, இக்கட்டுரை பிரயோகமானதாகவும் வாசகர்களது மனப்பூர்வமான பங்கும் இருக்க வேணடுமாயின் இன்று மக்களது மனதில் உறைத்தபடி உள்ள சில கேள்விகளுக்கு குறுகிய பதில்கள் சொல்ல வேண்டி உள்ளது. அதேவேளை, அவற்றிக்கான விளக்கங்கள் இல்லாது போகின் பதில்களின் பலன் மழுங்கி விடும் என்பதனால் விளக்கங்களை குறிப்புகளாகத் தருகிறோம்.

இவற்றின் பின்னடியிலேயே கட்டுரையின் பேரிலான ஆய்வுகளைத் தரமுடியும் என்பது எமது கருத்து.

கே: புலிகள் இராணுவ ரீதியில் தோற்று விட்டார்களா?
ப: இதுவரை காலமும் புலிகள் நடத்திய போர் இனிமேலும், ஒரு கணிசமான காலத்திற்கு தொடர முடியாதது.

(குறிப்பு 1: ஆயுதப் போராட்டம், மக்கள் போர், இராணுவ ரீதியில் அமைந்த போராட்டம், மக்கள் போராட்டம் என்பவற்கிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.)

(குறிப்பு 2: புலிகளின் தோல்வி எனும்போது எதனை குறிக்கின்றோம்? புலிகளது போராட்டத் திட்டமும், அரசியற் சாணக்கியமும், உலக-அதிகார-அரசியலின் அறிவும், அவர்களது ஆலோசகர்களது ஆற்றலும் எவ்வகைப்பட்டவை என்பது அவர்களது முடிவிலிருந்தே யாரும் ஊகித்துக் கொள்ளலாம். எனவே, அந்நிலைக்கு ஏன் வந்து சேர்ந்தார்கள் என்ற கேள்வியையும் விட்டுவிடுவோம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி புலி எதிரப்புத் தன்மைகளையும் கடந்து கேட்கப்பட வேண்டியவையும் உள்ளன. (1) ஒருவனை பன்மடங்கு பலம் கொண்டவன் தோற்கடிப்பது ‘போர்’ என்ற வழியில் பெரும் விடயம் அல்ல. (2) அதிலும் பிராந்திய பலவானின் அனுசரிப்புகளுடன் மண்ணிலும் விண்ணிலும் பெறக்கூடிய துப்பறிவுத் தென்புடன் தோற்கடிப்பது ஆச்சரியமுமல்ல. (3) மேலும் சகல வல்லரசுகளின் கூட்டு அனுசரணையும் இராணுவ உதவிகளும் வழங்கப்பட்டும் உள்ளன என்ற அறிவும் கிட்டும்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்பதிலும் பார்க்க “ஒரு சின்ன-மனிதனின் தோல்வி என்பதன் பொருள் என்ன?” என்ற கேள்வியே மீதமாகிறது.)

கே: புலிகளது தோல்வி தமிழ் மக்களுக்குமான தோல்வியா?
ப: ஒரு சொல்லில்: இல்லை!

(குறிப்பு 3: வெற்றி தோல்விகளை எடைபோடுவதும் அவற்றைக் கொண்டு மக்களது எதிர்காலம்பற்றி கணிப்புகள் செய்வதும் சுலபமான காரியமல்ல. அதற்கென்ற பக்குவமும் அறிவும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டாத மனப்பாங்கும் அவசியம். மேலும், வெற்றிகள் தோல்விகளால் ஏற்படும் (1) உடனடித் தாக்கங்கள் என்ன? (2) அவற்றின் அடிப்படையில் தொடரக் கூடிய நீண்ட காலத் தாக்கங்கள் என்ன? என்பவற்றை சேர்த்தே பார்திடுவதற்கு அவை அனைத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய, ஏற்கனவே உருவாகிவரும் தொலை நோக்கும் அதற்கான விருட்சமும் அவசியம்.)

(குறிப்பு 4: மக்களின் தோல்வி என்பதற்கும் அவர்களது அதிபதிகளது தோல்வி என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறு கூட பொருளற்ற கருத்து.

அமரிக்க இந்தியர்கள் பூரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும்தான் ஒத்துக் கொள்வர். ஏன்? அவர்களது சமூகத் தலைவர்கள் ஒவ்வொருவராக இராணுவரீதியில் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதாலா? இல்லை, வடதுருவத்திலிருந்து மெக்ஸிக்கோ வரை உள்ள பிராந்தியத்தியத்தை வெள்ளையர்களிடம் இழந்து விட்டார்கள் என்பதாலா? அதேவேளை மத்திய அமரிக்காவில் இருந்து தென் துருவம்வரை வெள்ளையர் வருகையுடன் அடங்கி ஒதுங்கி வாழ்ந்த அவர்களது சகலர்கள் தம்மை மீளார்த்தனம் செய்து கொள்வதை என்னென்று சொல்வது? அவர்களும் தோற்கடிக்கப்பட்டவரகள் அல்லவா?

வடக்கில் சரி கிழக்கில் சரி அமரிக்காவின் உரிமையாளர்கள் போர்களில் தம்மிலும் பல்மடங்கு பலம் வாய்ந்த எதிரிகளிடம் தோல்வி கண்டார்கள் தமது சொத்துகள் அனைத்தையும் இழந்தார்கள். ஆனால் கிழக்கில்மட்டும் தம்மை அதிகாரத்தில் மீழமைப்பு செய்யக் கூடியவர்களாக உள்ளனர் அது எப்படி?

இலங்கையில் இன்று இடம்பெற்றுள்ள இராணுவத் தோல்வி தமிழர்களது சரித்திரத்தில் புதியதல்ல. முழுத் தீவினையும் ஒரு அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்திட வேண்டும் என்பதற்கான போர்களின் வரிசையில் இன்று ஒப்பேறியது கடைசியாவதும் அல்ல. பொலநறுவா இராசதானியின் விழுக்காட்டின் பின்னடியில் (14ம் நூற்றாண்டு) யாழ் இராசதானி தோற்கடிக்கப்பட்டதும் மக்கள் தமது தமிழ் அடையாளத்தை அதற்கு ஏற்றவாறு கையாண்டமையும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சகல தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க போரிட்டதும் சரித்திரம். அப் போரில் இன்று தோற்கடிக்கப்பட்டதும் சரித்திரம். ஆனால் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்களா?

மக்கள் ஒருபோதும் போர்களினால் தோற்பதில்லை. ஒரு இனமாகத் தங்குவதற்கு அத்தியாவசியமான சமூகக் கட்டுகளை இழந்து போகும்போது, அல்லது இழந்து போய்விட்டதாக ஏற்றுக் கொள்ளும்போதே அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். மற்றய வேளைகளில் அவர்கள் முற்றாக நிர்முலம் செய்யப்படுகிறார்கள். ஆகவேதான், எம்மைப் பொறுத்தவரை மக்கள் முற்றாக ஒழிக்கப்படுவதையே மக்களது தோல்வி எனக் கருதுகிறோம்.)

கே: புலிகளது தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?
ப: இல்லை.

(குறிப்பு 5: நாமோ புலிகளது அங்கத்தவர் அல்லது ஆதரவாளர் என்ற நிலையில் ஒருபோதும் இருந்திராத போது ஒரு-இயக்கத்தின்-தலைவர் என்பதன் பிரகாரம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கில்லை. அவர்கள் தம்முள் வாக்குவாதப் படுகிறார்கள் என்பதனால் அதற்கும் ஒரு கருத்துச் சொல்லிட வேண்டும் என்ற அவாவோ அவசரமோ எமக்கு இல்லை.

அப்படியானால், பிரபாகரன் என்பவர் தமிழர்களுடைய ஏகபோகப் பிரதிநிதிகள் என்கிற அமைப்பின் தலைவர் அதாவது தமிழ் தேசியத் தலைவர் என்ற அழுத்தத்தின் கீழ் வாழ்ந்த தமிழ் பிரஜைகள் என்ற ஒரேஒரு காரணத்தாலேயே எமது பதிலைக் காண வேண்டும்.

எனவே, (1) தமது போரின் நிலைபற்றி, இறந்த தனது இராணுவ வீரர்கள்பற்றி அறிவிக்க முடியாது, (2) மக்கள், அதுவும் புலிகளையே நம்பி அண்டி வாழ்ந்தவர்கள், சிறீ லங்காவின் இராணுவ முகாங்களில் அவஸ்த்தைப் படுவதைக் கண்டும் ஆறுதல் கூட சொல்ல முடியாது, (3) சிங்கள சோவனிசவாதிகளது தமிழ்பிம்பங்களாக, சிங்கக் கொடியின் எதிர்மாறான புலிக் கொடியின் அதிபதியாக வெற்றிகளுடன் இருந்துவிட்டு இன்று சிங்களச் சோவனிசவாதிகள் மீண்டும் எக்கதாளம் போடுவதை கண்டும் புலிகளின் பாணியில் பதில் கூறாது (4) எமது மக்களது வாழ்வில் தலை போடும் உலக நாடுகள் அனைத்தும் “புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்” என்ற கருத்தை எமக்கே கூறி அடுத்த நகர்வுகள் பற்றி தாமே முடிவுகள் எடுக்கும் போது, ஒரு தேசியத்தின் தலைவர் எக்காரணத்தாலும் ஒளிந்து வாழ்வது பொறுப்பான காரியம் அல்ல. அதனை மட்டுமே கண்ணியமான நிலைப்பாடாகக் கொண்ட நாம் பிரபாகரன் உயிர் இழந்து போய்விட்டாரா இருக்கிறாரா என்பதற்கு பதில் காண வேண்டிய அவஸ்தையில் இல்லை. ஆனால், தலைவர் அவர்தான் அவரைவிட்டால் வேறொருவரும் உதவாது என்ற நம்பிக்கையில் காலத்தை விரையம் செய்த புலிகளகளின் ஆதரவாளர்களுக்கு அவர்கள் மீது தமது அன்பைக் கொட்டியே வாழ்ந்தவர்களுக்கு ஒரு திடமான பதிலைத் தர மிகவும் கட்டுப்பாடான அமைப்பு என்று கூறியவர்கள் இயலாது போனது மிகுந்த கவலைக்குரியது. மேலும், எமது மக்களது போராட்டத்தை தானாகவே தனியச் சுமக்க முயன்ற மனிதனுக்கு, மற்ற எந்தத் தமிழ் தலைவனிலும் பார்க்க பாரிய இராணுவ வெற்றிகளை ஈட்டிய தந்திரோபாரத் தளபதிக்கு இறுதி வணக்கத்தை செலுத்த முடியாது போய்விட்டதே என்பது புலிகளது போக்கிற்கு எப்போதும் எதிர்ப்பினைக் காட்டிவந்த எமக்கே வேதனை என்றால்? இது முதலைக் கண்ணீரோ மாற்றார் மனதைக் கவர எமது முயற்சியோ அல்ல.)

கே: புலிகளது அழிவை உலகநாடுகள் விரும்பியது ஏன்?
ப: முதலாவதாக, (1) புலிகள் ஒருபோதும் தகுந்த அரசியற் தீர்வை ஏற்கப் போவதில்லை (2) அதற்கான அரசியற் சாணக்கியமோ அதன் தலைமையின் அமைப்பில் வளைவு-சுழிவுகளிலான வாயில்கள் இல்லை (3) புலிகளது தலைமையால் பிராந்திய பூகோள ரீதியிலான அரசியற்-கேந்திர நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவோ அவற்றை ஏற்றுக் கொள்ளவோ முடியாது (4) பிரபாகரனிடம் இருந்து பெறாத புலிகளது வாக்குறுதிகள் ஒப்பந்தங்கள் செல்லா கடுதாசிகள் (5) புலிகள் தனிமனிதப் பயங்கரவாத நடை முறையை தமிழரிடையேயும் இலங்கையின் மற்றய சமூகங்களிடையேயும் சர்வ தேசிய ரீதியிலும் பாவனத்தில் கொண்டவர்கள். என்ற காரணங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) எந்த நாட்டின் இறைமையை தேசியவாத அடிப்படையில் ஆயுத ரீதியில் புரட்டிடுவதை வல்லரசுகளும் பிராந்தியப் பலவான்களும் அநுமதிக்க முடியாது. (2) ஒரு புதிய நாட்டின் பிறப்பு வல்லரசுகளடையே அல்லது பிராந்திய பலவான்களிடையே ஏற்ப்படும் இயங்கியல் நியதிகளில் மட்டிலுமே தங்கி இருக்க முடியும். (3) மூன்றாவது உலக நாடுகளின் சமூக-மாற்றங்கள் (social transformation) வளர்ந்த நாடுகளின் தேசியத்துவங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாதது.

மூன்றாவதாக, இந்தியா சீனா ஆகிய பிராந்திய வல்லரசுகள், இருதுருவ சர்வதேசிய அரசியல் சிதைந்து போனதிலிருந்து, (1) தம்மிடையேயான போட்டிகள் எவ்வகையாயினும் தமது பிராந்தியங்களில் மூன்றாம் பகுதியினரின் தலையீட்டை தவிர்ப்பதிலும் மிஞ்சினால் அவற்றின் தாக்கத்தை குறைப்பதிலும் கருத்தாக இருக்கின்றன. (2) தத்தமது நடவடிக்கைகள் காலப்போக்கில் “ஆசியக்-கேந்திர” நிலைப்பாடு ஒன்று உருவாகுவதற்கு ஏதுவாக அல்லது குந்தகம் இல்லாததாக அமைவதை விரும்புகின்றன.

(குறிப்பு 6: உலக நாடுகள் எல்லாம் எல்லா விடயங்களிலும் எப்போதும் தலைபோடுவது கிடையாது. நாடுகளின் தலையீடுகள் யாதார்த்த ரீதியில், (1) எமது தீவில் இடம்பெறும் போரினால் தமக்கு சார்பான-எதிரான விளைவுகள் (2); தமது கருமங்களின் பட்டியலின் ஒழுங்கில் அக்கணிப்புகளின் பிரகாரம் தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் அத்தியாவசியம் (3) தமது நடவடிக்கையின் விளைவுகள், என்பவற்றில் தங்கி இருக்கும். அவை இலட்சியக் காரணிகள் என்ற ரீதியில், (1) பிராந்தியப் பலவான்களின் தேவைகள், அவற்றின் அவசியங்கள் (2) பிராந்தியப் பலவான்கள்-வல்லரசுகளின் நடை முறைப் போட்டிகள் (3) சகலரும் இணங்கிக் கொள்ளும் விடயங்கள் என்பவற்றில் தங்கி இருக்கும்.)

(குறிப்பு 7: அமரிக்கா ஒரு சுதந்திர நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுபட்டு, பிராந்தியப் பலவானாகி, வல்லரசுமாகி, இன்று தான் மட்டுமே ஒரேஒரு வல்லரசு என்ற நிலைப்பட்டிற்கு 200 வருடங்களில் வந்துசேர்ந்துள்ளது. அங்கிருந்த பூர்வீகக் குடிகளை முற்றாக அழித்தொழிந்திருந்தும் கறுப்பு இனமக்களை பிரஜைகளாகவல்ல ஏன் மனிதர்களாகவே ஏற்க முடியாது என்ற சட்டங்களை 1960கள் வரை கொண்டிருந்த அமரிக்கா இன்று தன்னை மனிதாபிமானத்தின் பிரதிநிதியாக நியமித்துள்ளது. தனது பாதுகாப்பு கேந்திர அபிலாசைகள் என்றவாறு தனது சுற்றாடலில் மட்டுமல்ல அகிலத்தின் நான்கு கோடிகளிலும் பயங்கரவாதிகளை அரசேற்றியும் பயங்கரவாதத்தை பரப்பியும் வைத்த அதே அமரிக்கா இன்று ஜனநாயகம் என்ற தனது புதிய ஆங்கில-ஷாக்ஸன் சித்தாந்தத்தை, காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவத்தை பரப்பியது போல, கலாச்சாரப்-போர் ஒன்றினை முன்நின்று நடத்துகிறது. அதற்காக நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றி சமூகங்களை மனிதர்களை கூட்டோடு அழித்திடவும் தயாராக உள்ளது. ஆனால் 9-11 என்பதை உலக அரசியலின் எல்லைக் கல்லாக்கி “பயங்கரவாதத்திற்கு” எதராக பெரும் போர்களையும் நடத்துகிறது. நாடுகளின் இறைமை என்று பிறருக்கு அளந்திடும் போதிலும் தனது நீண்டகால நண்பனான பாக்கிஸ்தானின் பிரதேசத்துள் கூட இராணுவ நடவடிக்கைகள் எடுக்கிறது. முதலாளித்துவத்தின் பாதுகாவல்-வீரனாக(champaion) தன்னை முன்வைத்திடும் அமரிக்கா அதன் பேரில் உலகெலாம் தனது வீச்சை வளர்த்து பாதுகாப்பதை கடமையாகக் கொண்டுள்ளது. அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தலையீடுகளுக்கும் எதிரானவர்கள் கூட அதனது வீச்சை, அது ஏற்படுத்தும் இயங்கியற் நியதிகளை அவற்றின் இருப்பை நிராகரித்திட முடியாது. கண்களை மூடியபடி மந்திரங்களை உச்சரிப்பது போல அமரிக்க எதிர்ப்புக் கோஸங்களுடன் மட்டும் காலம் கடத்திட முடியாது.)

அமரிக்கா போலவே பிராந்திய பலவானாகவும் இன்று பிராந்திய வல்லரசாகவும் வளரும் இந்தியா, தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம் பெறும் சர்ச்சைகள் யாவற்றையும் குறைந்தபட்சம் தனது கவனத்தில் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கான காரணங்களாக, (1) வெளியார் பிரச்சனைகள், உறவுகள் (உ. ம்: தமிழர், காஸ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்ற உறவுகள்), உணர்வுகள் (உ. ம்: போராட வேண்டும், மக்கள் அமைப்புகள், மாற்று அதிகாரக் கட்டுகள் வேண்டும் என்ற உந்தல்கள் போன்ற உணர்வுகள்), புதிய சித்தாந்த அல்லது நடைமுறைக் கருத்துக்களால் (உ. ம்: தேசியம், வர்க்கம், மனித உரிமைகள் என்பவை அவற்றின் கலப்புப் பிறப்புகள் போன்ற கருத்துக்கள்) தொற்று நோய்களாக உள்வருவதை தடுப்பது (2) தனது பிராந்தியத்தில் இடம்பெறும் விடயங்களின் வீச்சையும் ஆழத்தையும் நிச்சயம் செய்வதில் தானே கூடிய பங்கினை வைத்திருப்பது (3) தனது பிராந்தியத்தில் பிறத்தியாரின் தலையீட்டை மட்டுப் படுத்துவது (4) தனது உலகளாவிய செல்வாக்கை மேம்படுத்திடுவது (5) தனது கருவிகள் இயலுமைகள் ஆற்றல்கள் தொழில் நுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கான தருணம் என பாவித்துக் கொள்வது என்பவற்றை முதற்கண் குறிப்பிடலாம்.)

(குறிப்பு 8: ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரிகளுக்கும் எதிராக எத்தனையோ கோஸங்களை தொண்டை கிழிய கத்துவதென்று முடிவு செய்துவிட்டாலும், குறைந்தபட்சம் இப்பாதையில் எவற்றினை அடைவது என்ற மைல்கற்கள் இல்லாவிடில் எப்படி எமது அடிகளை முன்வைப்பது? இந்தியா ஒரு நாடா? நாடென்றால் அது முன்னேற்றமானதா? அது உண்மையாக ஜனநாயகம் கொண்டதா? அங்குள்ள மக்கள் இனங்களாகவும், வர்க்கங்களாகவும் சுதந்திரமானவர்களா? இந்தியா இலஞ்சத்தின் தலைநகர் அல்லவா? அங்குள்ள அரசியல்வாதிகள் கொலைகாரர்களும் கள்ளர்களும் பொய் சொல்பவர்களுமல்லவா? இப்படியாக ஆயிரம் கேள்விகேட்டு காரியங்கள் எதுவுமே செய்யாது வாயடித்து வாழ்பவர்கள் சுவருடன் மோதுவது போல காரியம் ஆற்ற முயன்று மடிந்த புலிகளை வையாதிருப்பர் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. இலங்கைத் தீவை அடியோடு வெட்டி சீனாவிற்கு அல்லது அமரிக்காவிற்கு அருகில் இழுத்துச் செல்லும் வரை இந்தியாவின் தலையீட்டினை தவிர்த்துக் கொள்ள முடியாது என்பதையும் ஆகவே, அத் தலையீடுகளின் எதிர்மாறான அல்லது சாதகமற்ற விளைவுகளை எப்படி குறைத்துக் கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதும்தான் இன்று ஒரே வழி என்பதையும் ஏற்றாகத்தான் வேண்டும். வெற்றுச் சித்தாந்தங்களும் மக்கள் அமைப்புகளும் மட்டும் போதுமாகின் புலிகளுக்கென்ன ஜே.வி.பியினருக்கும்தான் நடந்ததை நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.)

கே: புலிகளின் போர் முற்றிலும் விரையமானதா?
ப: இல்லை!

முதலாவதாக, (1) சின்ன மனிதராலும் பாரிய இராணுவ வசதிகள் கொண்ட நாட்டுடன் “போரிட” முடியும் (2) அப்போரின் வெற்றிகளால் சில அரசியல் நிலைப்பாடுகளைக் கூட ஏற்படுத்த முடியும் (3) சிறு தொகையினராகினும் பிழையான வழிமுறைகளைக் கொண்டாவது அவர்களுள் கணிசமான விகிதாசாரத்தில் இளைஞர்களை “போரில்” ஈடுபடுத்த முடியும் (4) “சரி” என்ற நம்பிகை இருப்பின் சின்ன மனிதர்கள் இந்தியா போன்னற வல்லரசையும் கையாளலாம். இவ்வாறான சமூக-மனோவியல் ரீதியான தாக்கங்களைக் கூறலாம்.

இரண்டாவதாக, (1) பிராந்திய தமிழ் மக்களது அபிலாசைகளின் எழுச்சி (2) தமிழர்களது சமூக-மாற்றம் (3) தமிழர்களது தேசியவாதத்தை சர்வதேசியமயப் படுத்தியமை (4) இஸ்லாமியர்களது தனித்துவம் முன்னிறுத்தப் பட்டமை. என தமிழர்களிடையேயும் தமிழ் பேசும் சமூகங்களிடையேயும் ஏற்பட்டுள்ள அரசியல் மேலும் அவற்றினூடான பொருளாதாரத் தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

மூன்றாவதாக, (1) MOU-2002 (2) ஒஸ்லோ ஒப்பந்தம் என்பவற்றாலான சிறீலங்கா அரசியற் அமைப்பு மீதான தாக்கங்களைக் குறிப்பிடலாம்.

(குறிப்பு 9: இன்று பெரிய இனங்களாகத் திரண்டு காண்பவை அன்று, குடியானவர் சமூகங்களின் ஆரம்பக் காலங்களின் முன்னர், தாமாகவே ஒன்று சேர வேண்டிய அல்லது அதன் பின்பு ஒன்று சேர்க்கப் பட்ட சின்ன இனங்களின் கூட்டுகள். தேசியஇனங்கள் இனங்கள் என்பவற்றை நாம் எப்படிக் கணிப்பது என்பது தர்க்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய பாரிய கேள்வி. எம்மைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்பதை என்றென்றும் கூறிவந்துள்ளோம். மேலும், வடஐரோப்பிய (மேற்கத்திய) உற்பத்தி முறையில் (mode of production) உருவான தேசியம் என்ற வரையறுப்புகளுக்கும் ஆசிய-உற்பத்தி முறையில் கிராமிய அமைப்பு வடிவத்தில் உருவாகி காலனித்துவத்தூடாக வலுக்கட்டாய சமுதாய-மாற்றங்கள+டாக 200 வருடங்களைக் கடந்து வலுக்கட்டாயங்கள+டாக “நாடுகளாக” பரிணமித்த மக்கள் பிரதேசத்தில் இக் கேள்விகளை எப்படி முன்வைக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயம்.)

(குறிப்பு 10: ஆனால் தேசிய இனங்களோ இல்லையோ தன்னுணர்வு கொண்ட அல்லது எமது நிலைமை போல புறத் தேசியத்தின் வலுவால் தன்னுணர்வு ஊட்டப்பட்ட சமுதாயங்கள் “வளரும்” “நாடுகளில்” மிகப் பல. இன்று அவை யாவுமே அரச- பலாத்தகாரத்தினூடாக ஒரு பொதுத்-தேசியத்துள் ஒன்றுபடுத்துவதற்காக தாக்கப்படுகின்றன, பயங்கரவாதத்திகு உள்ளாக்கப் படுகின்றன. அதற்கான காரணம் பொதுவாக அவர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள இயற்கை தந்த செல்வங்களே என்பது உண்மை. பெருவின் (Peru) மலைக்காடுகளை பணமாக்குவதற்கு வெளிநாட்டு பெரும்-முதலாளிதுவத்துடன் கூட்டாக உள்நாட்டில் காலனித்துவத்தின் எச்சச்-சமூகங்கள் துணைபோவதும் அத்தேச இந்தியர்கள் தாக்கப்படுவதும், அல்லது பிரேஸிலின் காட்டுவளங்களை அந்நிலங்களின் கீழ் புதைந்துகாணும் தாதுப் பொருட்களை மண்-நெய்யை பெறுவதற்காக அந்நாட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதும் அப் பிரதேசங்களிலிருந்து அகற்றப் படுவதும், இதுபோல ஆயிரம் அன்றாட நிகழ்வுகளை உலகெங்கும் குறிக்கலாம். ஆனால், பாக்கிஸ்தானின் ஸ்சுவாட் மலைச் சாரல் பிரதேசங்களில், பர்மாவின் கரன் மக்களது கிராமங்களில் அவர் பிரதேசத்தில், இலங்கையில் தமிழரது பாரம்பரிய பிரதேசங்களில் அஷபஸானில் (Azerbagan) உள்ள நகூனகரபாஷின் ஆமீனியர் (Armenia) மீது நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை வௌ;வேறு காரணிகளைக் கொண்டவை. ஆனால் சின்ன மனிதர்களது எதிர்காலம் என்பதில் ஒன்றுபடுத்தப் படுபவை.)

(குறிப்பு 11: சின்ன மனிதர்ளைச் சேர்த்ததுதான் பெரிய இனங்கள் என்றால், சின்ன மனிதர்கள் ஏன்தான் போராடிட வேண்டும்? அவ்வாறான சமூக-மாற்றங்கள் இயற்கையின் ஓட்டமாயின் ஏன்தான் எதிர் நீச்சல் போட வேண்டும்?
மனிதனோ வெறும் பொருளாதார ஓட்டங்களில் மட்டுமே தங்கிய காலம் போய், அவற்றின் நியதிகளைத்; தாண்டி, தனிமனித வாழ்வுகளுடன் ஒட்டி மீண்டும் பொதுமனித உணர்வுகளின் பெறுமதியை தனது நுகர்வுகளால் பெற்றபின் உணர்வு ரீதியில் தாமாகவே ஒன்றென்பதும் அவ்வொருமையை நாடி அதனைப் பேண முயல்வதும் இ;யற்கையின் சமூகவியல் நியதிகளே. அவர்கள் சின்ன மனிதர்கள் என்பதால் மட்டும் அவர்களது அந்த-உணர்வை தடுத்துவிட முடியாது. இதுவொரு காரணியே போதும் பல நூறு காரணங்களை காலாகாலத்தில் வாதங்களாகத் முன்வைப்பதற்கு.

ஏன் எமது போராட்டத்தில் ஒரு பொது-அடையாளத்தை வலக்கட்டாயமாக கொடுக்க முனைந்ததின் விளைவை நாம் காணவில்லையா? தமிழீழம் என்பது எவ்வளவுதான் சிங்கள-பெரும்-தேசியவாதத்திற்கு தர்க்க பூர்வமான பதிலாகத் தோன்றினும், அதனது போர்வைக்குள் தமிழர்களது ஒவ்வொரு சமூகத்தையும் அணைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், தமிழீழம் என்ற வரைவுக்கு பூர்வீகநிலம் என்ற உரித்து உத்தரவாதமாக இருக்க வேண்டியதால் அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுடன் உறவுகளை பேணிடும் அரசியற் கட்டுகளையும் கொண்டிருக்க முடியவில்லை.

தமிழீழப் பிரதேசத்துள் வாழும் இஸ்லாமியரை ஏற்றுக் கொள்ள முடியுமாயின், அவர்களது இருப்பை, நில உரித்தில்லாத அந்தப் பிறஇனத்தின் குடியேற்றத்தை ஏற்றுக்;கொள்ள முடியுமாயின், சிங்களவரது குடியேற்றங்களை எப்படிக் கணிப்பது? இஸ்லாமியரகள் தமிழ் பேசுபவர்களாக இருப்பதாலா, அப்படியாயின் அவர்களது சிங்களம் பேசும் உறவினர்களது உரித்து என்னாவது? சிங்களவரது இருப்பை திட்டமிட்ட அரசக் குடியேற்றம் என்றதால் நிராகரிப்பதாயின், இஸ்லாமியர்கள் அங்கு இருந்துவிட்டதால் பெற்ற உரித்து என்ற ரீதியில் ஏற்பதாயின் நிலங்களை சட்டபூர்வமாக சிங்களவர் வாங்கிக் குடியேறிவிட்டால் எப்படிக் கணிப்பது? இவை விளக்கங்கள் பெறக்கூடிய விடயங்களா? அல்லது தமிழீழுக் கோரிக்கையால் தீர்க்க முடியாத உள்முரண்பாடுகளா?

அவை எவையாகினும் தமிழீழம் எனும் பொது-அடையாளத்துள் யாவரும் அடங்கவிலை என்பது திண்ணம். அதிலும் சின்ன மனிதர்களாக கிழக்கிலும் ஏன் இன்று வடக்கிலும்தான் தமது அடையாளங்களை சில சமூகங்கள் தேடுகின்றன என்பதே ஆதாரங்கள் நாம் தொடுத்த வாததிற்கு.

எனவே சின்ன மனிதர்கள் தமது அடையாளங்களை வெறும் இனம் என்பதன் அடிப்படையிலேயே கோரிடும் உரிமை யாரும் வழங்காமலே அவர்களுக்கு உண்டு. தேசியம் என்பது அவர்கள் அனைவரும் வௌ;வேறு சமூகளாக தமது அடையாளங்கள் என்பவற்றைத் தாண்டி, பொருளாதார சமூக-மாற்றங்களில் மேலும் ஓருபடி உயர்வதற்கு பொது அடையாளத்தின் பாதுகாப்பையும் அநுசரணையையும் தேடும்போதே சகல சமூகங்களையும் ஆட்கொள்ளும் தர்க்கீகமாகிறது.)

(குறிப்பு 12: சின்ன மனிதர்களது இருப்பு உலகிற்கு ஏன் தேவை என்பதற்கு அவர்களது சுயநிலை வாதத்திலும் பார்க்க மாற்றார்களது அவசியங்களோ அதிகம். அந்தமான் தீவிலுள்ள ஆதிவாசிகள் பாவிக்கும் மூலிகைகள் நாகரிக உலகத்தின் புதிய வியாதிகளுக்கே மருத்துவமானது என்பது வியப்பானதாக இருக்கவேண்டுமா? அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையில் தங்கி இருப்பவர்கள் தமது உடலால் ஆன இயல்புகளில் மேம்பட்டவர்கள் என்பதும், நாகரீக மனிதர்களாகிய நாம் ஒருகால் களைந்தெறிந்துவிட்டு இன்னொருகால் தேடுவதும் அவை என்பதையும் நாம் உணர்ந்துள்ளோமா? கலாச்சார நாகரீகம் எவ்வளவுதான் இயற்றுமையின் புதிய-உருவாக்கங்களின் எல்லைகளைத் தேடி அடையினும் சின்ன மனிதர்களது பிரத்தியேக அறிவுகளும் ஆற்றல்களும் அவற்றினை மெருகூட்டும் என்பதை புரிந்துள்ளோம் அல்லவா? ஒவ்வொரு விலங்கினமும், ஏன் நுண்ணுயிர்கள் கூட அழிந்து போகும்போது நாமும் ஒருபடி அழிந்து போகிறோம் என்பதை உணர்ந்துள்ளோமா இல்லையா? இவ்வாறான நுகர்வுத் தன்மைகளை அவற்றினை எட்டிடும் ஆறறிவினை கொண்டவர்களாயின் சின்ன மனிதர்களது இருப்பின் அவசியத்தை எவ்வாறு சர்ச்சையாக்கிட முடியும்?)

புலிகளது அதிகாரக்காலத்தின் ஒருபகுதியையே இங்கு தந்துள்ளோம். இன்னுமொரு தருணத்தில் மற்றும் சில பகுதிகளை எமது பார்வைக்கு உட்படுத்த வேண்டி உள்ளோம். அவற்றின் அடிப்படையிலேயே எமது மக்களது எதிர்காலம் பற்றிய சில கருத்துகளை திடமாக முன்வைக்க முடியும் என்பது எமது கணிப்பு.

-நன்றி.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary(ASATiC)
20 ஆனி 2009

இன்று 21 ஆனி 2009 தேசம்நெற்றினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தமிழர்களின் அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் கூட்டத்திற்காக ரவி சுந்தரலிங்கத்தினால் எழுதப்பட்ட கட்டுரை இது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • kumar
    kumar

    கட்டுரையாளர் சில முக்கிய விடயங்களை தொட்டுச்சென்றிருக்கிறார்.அந்தளவில் அவர் பணி பாராட்டப்படவேண்டியதே.ஆனால் வழக்கம்போல் அவற்றை புத்திசாலித்தனமாக வினாக்களாக தொட்டுச்செல்கிறாரேயொழிய தனது கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்ல தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.ஒருவேளை அவ்விடயங்களில் மேலும் விளக்கம் பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றாரா அல்லது தெளிவாக முன்வைத்தால் ஏதும் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்று அச்சப்படுகின்றாரா என்று தெரியவில்லை.ஆனால் மக்களை வென்றெடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல சிறந்த பாதையை காட்டுவது அவரது விருப்பமாக நோக்கமாக இருப்பின் அவர் தனது கருத்துக்களை தெளிவாக உறுதியாக முன்வைக்கவேண்டும்.

    மேலும் கட்டுரையின் தலைப்பாக “இலங்கைத்தமிழர்களின் எதிர்காலம்”என்று இருக்கிறது.ஆனால் கட்டுரையினுள் அது பற்றி எதுவும் விளக்கப்படவில்லை.ஒருவேளை பாகம் இரண்டில்தான் அதுபற்றி சொல்லப்படுமோ தெரியவில்லை.அடுத்து “சின்ன மனிதர்கள்”என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது என்ன அர்த்தத்தில் பயன்படுத்ப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.ஏதும் ஆங்கில சொல்லுக்கு கட்டுரையாளரின் நேரடி மொழியாக்கமா அல்லது ஏதும் விடயத்திற்கு சரியான தமிழ் சொல்லாக கட்டுரையாளர் இதைக் கருதுகின்றாரா தெரியவில்லை.தங்களைத்தானே மார்க்சியவாதிகளாக சொல்லிக்கொள்ளும் பலர் இலங்கையில் பூர்வீகத்தமிழ்தேசிய இனம் மலையகமக்கள் தேசியஇனம் முஸ்லிம்தேசிய இனம் என பல தேசிய இனம் இருப்பதாக கூறுகின்றனர்.இன்னும் சிலர் ஒருபடி மேலேசென்று மட்டக்களப்பு தமிழர்களும் தனித்தேசிய இனம் என்று கூறுகின்றனர்.இன்னும் புங்குடுதீவு மக்களை தேசிய இனம் என்று சொல்லாதது மட்டுமே பாக்கி என்று இருக்கும்போது கட்டுரையாளர் தமிழ்மக்கள் யாராயுமே தான் தேசிய இனம் என்று அங்கீகரிக்கவில்லை என்கிறார்.முன்பு இலங்கை கம்யுனிஸ் கட்சி தலைவர் சண்முகதாசன் அவர்களும் தமிழ்மக்களை தேசிய இனம் என்று அங்கீகரிக்கவில்லை.பின் அவர் தனது தவறை திருத்திக்கொண்டு இலங்கை தமிழ்மக்களை தேசிய இனம் என்றும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் கூறினார்.அவர் தமிழ்மக்களை தேசிய இனம் இல்லை என்று கூறியபோது அதற்கு காரணமாக தமிழ்மக்களுக்கு நிலையான பொருளாதாரம் இல்லை என்றும் யாழ்ப்பான மக்களின் பொருளாதாரம் “மணியோடர் பொருளாதாரம்” என்றும் நகைச்சுவையாக கூறினார்.ஆனால் இங்கு கட்டுரையாளரும் தமிழ்மக்களை தேசியஇனம் என்று கூறினாலும் அதற்கு காரணமாக வேறு விடயத்தை வினாவாக தெளிவின்றி முன்வைக்கிறார்.அவர் இக் கருத்தை தெளிவாக விளக்கவேண்டும்.
    கட்டுரையாளர் இந்தியா பற்றி நிறைய கூறுகிறார்.இதைப்படிக்கும்போது இந்தியா எமக்கு எதிரி என்றதையே அவர் சொல்ல முனைவதாக தோன்றுகிறது.அது உண்மையாயின் அதை நேரிடையாக “இந்தியா எமது எதிரி” என்று சொல்லவேண்டியதுதானே?எதற்காக சுற்றி வளைத்து சொல்ல முயலவேண்டும்?

    “இலங்கைத்தமிழர்களின் எதிர்காலம்” பற்றி கட்டுரையாளர் சொல்ல விரும்புவதால் அவரிடம் நாம் எதிர்பார்க்கும் விடயங்களாக இருப்பவை
    (1)இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு ?
    (2)அந்த தீர்வை அடைய என்ன வழி?
    (3)எமது நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
    (4)எமது பாதை ஆயுதப்போராட்டமா? பாராளுமன்ற பாதையா?
    (5)மார்க்சிச லெனிசிச மாவோசிசத்தை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாமா?
    மேற்கண்ட வினாக்கள் குறித்து கட்டுரையாளர் தனது கருத்துக்களை தெளிவாக வைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    Reply
  • Kumaran
    Kumaran

    Sorry to write in English (I don’t have Tamil typing facility)

    This is the problem with so-called intellectuals. Is Ravi’s writing for a group of people or every reader? Why can’t you say in simple Tamil or in Tamil which can be read and understood by every one? Why can’t you come forward and say where you stand and what is the solution for the Problem? Peace, reconciliation and a solution through democratic process? Or money box idea of Transitional Tamil Elam. This is the problem with EROS as well; they never made any clear statement or expose them self as to where they stand even when LTTE existed?

    Reply
  • மாயா
    மாயா

    ரவி அவர்களே, விசிலடிக்கிறவர்களுக்கு லெனின் மாக்ஸ் தெரியாது. உங்கள் கட்டுரை இரண்டாவது தரம். 4 தரம் வாசிச்சாத்தான் விளங்கும்? அடுத்த முறை எழுதும் போது விசிலடிப்பவர்களுக்கு அதிகமாக விளங்க சற்று இலகுவாக எழுதுங்கள். வீதி முழுக்க அவர்கள்தான் நிக்கிறார்கள். 2 படிச்சவர்களை விட 98 மடையர்களது பலம் அதிகமாக இருப்பதாக உலகம்(தமிழர்) பார்க்குது. எனவே அந்த 98க்கும் விளக்கம் தேவை…..இல்லையென்றால் அடுத்த உயிர்த்தெழுதல் வரை இந்தக் கூட்டம் ஓயாது. அது தமிழரை நடுத்தெருவில்தான் கொண்டு வந்து அகதிகளாக இல்லை, நாடோடிகளாக (ஜிப்சி) ஆக்கிவிடும்.

    Reply
  • SITHARAMAN
    SITHARAMAN

    DO WE NEED ANOTHER WAR?
    DEPENDS
    HOW SRILANKAN GOVERMENT RESPONSE

    BUT WE COULD HARDLY BELIVE THERE WILL BE A SOLUTION SRILANKAN MIGHT HAVE FOR IT.

    OUT SIDE TAMIL ELAM GOVERMENT ALSO WAST OF TIME.

    AND WE ALL WANTED TO RESPECT LAST RESPECT. BUT WORDS WOULD NOT COME.

    Reply
  • மகுடி
    மகுடி

    நேற்று ஒரு கொலைகாரனை தேசியத் தலைவர் என்றார்கள்.
    இன்று ஒரு ஆயுத கொள்வனவாளனை அடுத்த உலகத் தலைவன் என்கிறார்கள்.
    என்னப்பா இது? படித்தவர்கள் அனைவரும் அழிந்து போனார்களா? அல்லது அழித்துப் போனார்களா? அன்று தமிழன் என்றால் படித்தவன் என்பார்கள். இன்று தமிழன் என்றால் கேடிகள் – கொலைகாரர் – கிரிமினல் – மந்தைகள் – மொக்குகள் ………… இப்படியாகிவிட்டதே?

    Reply