கொழும்பு, கண்டி, களுத்துறை பகுதியில் இடியுடன் கடும் மழை, வெள்ளம்; இயல்பு நிலை பாதிப்பு

colombo-town-hall.jpgநாட்டின் சில பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு, களுத்துறை, கண்டி மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் ரயில், பஸ் போக்குவரத்துக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

நாட்டின் பல் வேறு பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்து வரும் போதிலும் நேற்று முன்தினம் (17) இரவு முதல் காலை வரை திடீரென தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியதுடன் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். சில வீதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் நிறைந்திருக்கிறது.

நேற்றுக் காலை கொழும்பு உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.  சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டது. புறக்கோட்டை, தெஹிவளை, மருதானை, மாளிகாவத்தை, புளுமெண்டல் வீதி, மஹரகம, கிரேண்ட்பாஸ், ரத்மலானை, நுகேகொட, பெபிலியான, பொரலஸ்கமுவ, வெஹரஹர, கடுவெல, மீதொடமுல்ல, கொலன்னாவை, காசல் வீதி, குணசிங்கபுர உட்பட பல பகுதிகளில் 600க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதோடு பல வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில தெரிவித்தார்.

பல பிரதான வீதிகளில் நீர் நிரம்பியிருந்ததால் வாகன நெரிசல் காணப்பட்டது. குண சிங்கபுர பஸ் தரப்பிடம் புளுமெண்டல் உப மின் நிலையம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. கொழும்பு 13, 14, 15 பகுதிகளில் காலை வேளையில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள நீர் மாளிகாவத்தை ஆஸ்பத்திரி பகுதியில் புகுந்ததால் ஆஸ்பத்திரி பணிகள் தடைப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் பல நீரில் மூழ்கியுள்ளன.பாணந்துறை, பேருவளை, பயாகலை, மதுகம, களுத்துறை, வஸ்கடுவ, பொது பிடிய, வாத்துவை, பின்வத்த போன்ற பகுதிகளில் தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 1200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தொடர் மழையினால் தோட்டங்களில் பால் சேகரிப்பு, சீவல், கடற்றொழில், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டன. அக்குறணை பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பிங்காஓயா பெருக்கெடுத்ததால் இப்பகுதியில் வெள் ளம் ஏற்பட்டது. மஹய்யாவ பகுதியில் ஏற்பட்ட மண் சரவில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கம்பொல – கண்டி ரயில் வீதியில் பொல்கும்புர எனும் பகுதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன் ஒருவர் காயமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஜின் கங்கை, மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாழமுக்கம் நகர்ந்தது

நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையம் கூறியது.  இந்த தாழமுக்கம் இலங்கையை விட்டும் நகர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால்ஆகக் கூடுதலாக இரத்மலானை யில் 210.0 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பில் 207.0 மி.மீ. மழை வீழ்ச்சியும் கண்டியில் 93,0 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

எதிர்வரும் தினங்களில் மாலை வேளையிலும் இரவு வேளையிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் கூறியது. 4 வருடங்களின் பின்னரே கொழும்பில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

colombo-town-hall.jpgகொழும்பில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு மாநகர சபை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *