அரசின் மீள்குடியேற்றமும் மக்களது மீளாத்துயரும் : த ஜெயபாலன்

Rehabilitation_Wanniஇலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆட்சியைத் தொடர்வது ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை தொடருவதற்கு உதவும் என்ற வகையில் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தலையிடிக்கு தலைப்பாகையை மாற்றுவது மருந்து அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நடைபெற்ற தேர்தல் முடிவுகளோ தேர்தலோ அவர்களுக்கு ஒரு விடயமே அல்ல. அவர்களுடைய சுமைகள் அத்தேர்தலை விடவும் கடுமையானது கொடுமையானது.

அரசாங்கம் மீள்குடியேற்றத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவிக்க உள்ளது. இதன்படி 1000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த மீள்குடியேற்றங்களின் பின் என்ன நிகழ்கின்றது.

இலங்கையில் நான் தங்கியிருந்த நாட்கள் பெரும்பாலும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுடனேயே கழிந்தது. அவர்களில் ஒரு குடும்பத்தினரின் வாழ்வியலைப் பகிர்ந்துகொள்வது வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக அமையும்.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களின் இரு புதல்விகள் அவர்களின் கணவர்கள் அவர்களின் பிள்ளைகள் என ஒன்பது பேர் கொண்ட குடும்பம். அவர்கள் விவசாயத்திலும் அரச தொழில்களிலும் ஈடுபட்டு தன்னிறைவாக வாழ்ந்தவர்கள். தங்களது சம்பாத்தியத்தின் மூலம் சிறுகச் சிறுக சேமித்து தங்களது அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர்.

வயதான தாய் தந்தை மூத்த மகள் ஆசிரியை அவருடைய கணவர் அரச உத்தியோகஸ்தர் அவர்களுக்கு பெண்ணும் ஆணுமாக இரு குழந்தைகள். சிறுவர் படையில் சேர்க்கப்படக் கூடிய பருவம். கடைசி மகள் சங்கத்தில் வேலை கணவர் அச்சகத்தில் வேலை. அவர்களுக்கு ஒரு குழந்தை சிறுவர் படையணியில் சேர்க்க முடியாது. கைக் குழந்தை. அத்துடன் அவர் கர்ப்பணித் தாய்.

ஜனவரி 3 கிளிநொச்சி அரச படைகளின் கைகளில் வீழ்ச்சி அடைய கிளிநொச்சியில் உள்ள தங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்கள் வாழ்நாளில் சேமித்தவை தங்கள் உணவுத் தேவைக்கான நெல் இவற்றுடன் இவர்களது பயணம் ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் இப்பயணம் இவ்வளவு நீண்டது என்றோ இவ்வளவு கொடுமையானது என்றோ இவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கிளிநொச்சியில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் பண்டத்தையும் இழந்து இறுதியில் ஒவ்வொரு முடிச்சுடன் புதுமாத்தளன் வந்தடைந்தனர். அதற்குள் நடந்த கொடூரங்களை விபரிப்பதற்கு தமிழ் அகராதியில் வார்த்தைகளே இல்லை. தங்கள் எதிரிக்குக் கூட அப்படி நடந்துவிடக்கூடாது என்று அவர்கள் கடவுளை வேண்டுகின்றனர்.

அரச படைகளின் தாக்குதல்களில் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று தப்பியோட முற்பட்ட போதெல்லாம் தங்களை துப்பாக்கி முனையில் ஈவிரிக்கமற்றுத் தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் திட்டாத நாளில்லை. ‘ஆமிக்காரன் தான் எங்களுக்கு செல் அடிக்கிறான் என்றால் இவன்களும் சேர்ந்து தான் எங்களுக்கு செல் அடித்தாங்கள்.’ என்று குமுறினார் அந்த வயதான தாய். ‘அவங்கள் எங்களை மனிசராயே நடத்தேல்லை’ என்று அவர் புலம்பினார். தங்கள் குடும்பத்துடன் தப்பியோட முற்பட்டவேளை சுடுவதற்கு துப்பாக்கியை லோட் பண்ணி நீட்டியபோது நாங்கள் இங்க இருந்து எங்கயும் போகமாட்டோம் என்று பிள்ளைகளையும் கட்டி அணைத்து கதறி அழுதாள் ஆசிரியையான மூத்த மகள். லோட் பண்ணிய துப்பாக்கியால் அருகில் நின்ற ஒருவரை சுட்டுக்கொன்றதாம் அந்தப் புலி.

சனங்கள் தப்பியோடத் தயாராய் நிற்கின்ற இடங்களில் எல்லாம் தங்கள் குறும்தூர செல்களால் புலிகளே மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளதாயும் அவர்கள் கூறுகின்றனர். அந்த யுத்தத்தில் அரசாங்கமும் புலிகளும் மக்களுக்கு எதிராக கொலைத் தாக்குதலை நடாத்தி உள்ளனர். பல நேரங்களில் செல் தாக்குதலை அரசாங்கம் செய்கிறதா அல்லது புலிகள் செய்கிறார்களா என்பதையே தங்களால் ஊகிக்க முடியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மரணத்தின் வலியும் கொடுமையும் தினம் தினம் கொல்ல எங்கு தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விடுவோமோ என்ற பயம் தான் அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தியிருந்தது. செல் வீச்சுக்கள் வருகின்ற போது அனைவரும் ஒன்றாக தங்கள் குழந்தைகளை அனைத்தபடி ஒன்றாகப் படுத்துக் கொண்டனர். மரணம் சம்பவித்தால் அது அத்தணை பேருக்குமானதாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர்.

கர்ப்பிணித்தாயான இரண்டாவது மகள் நாளுக்கு நாள் அவருடைய சிசுவும் வளர்ந்தது. தாய்மையின் வலி அதன் உபாதைகள் இவற்றுக்கு மத்தியில் மரணத்தின் கொடுமை. வாழ்வில் மிக மென்மையாக பேணப்பட வேண்டிய தாய்மைக்காலம் மிக்க கொடுமையானதாக அமைந்தது.

இவற்றில் இருந்தெல்லாம் தப்பி வந்தபோது இலங்கை இராணுவம் பிடித்தால் சித்திரவதை செய்யும், கற்பழிப்புச் செய்யும் என்றெல்லாம் சொல்லப்பட்ட கதைகளைக் கேட்டு வந்தவர்களுக்கு இலங்கை இராணுவம் தண்ணீரும் பிஸ்கட்டும் கொடுத்து அவர்களை குண்டு வீச்சும் செல்வீச்சும் இல்லாத இடத்திற்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளித்தது.

ஆனால் அந்த அறுதலைத் தவிர அவர்களுக்கு வன்னி முகாம்கள் எவ்வித நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அவர்களின் ஆளுமையை ஆற்றலை சிதறடித்தது. மரணத்தின் கொடுமையில் இருந்து தப்பியவர்கள் நோயின் கொடுமையில் துவண்டனர். சுகாதாரமற்ற சுவாத்தியம். வாட்டி வதைக்கின்றி கடுமையான வெப்பம். அடிப்படை வசதிகளற்ற சூன்யமான எதிர்காலம் அவர்களை வாட்டியது.

நிறைமாதக் கர்ப்பிணியான இரண்டாவது மகள் எல்லைகளற்ற மருத்துவர்களின் தரமான கவனிப்பில் தன் கவலைகளையெல்லாம் மறக்கும் வகையில் தன் யுத்தகால பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதனால் அவர்கள் முகாமைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கணவனின் குடும்பத்தவருடன் இணைந்து கொண்டனர்.

மற்றைய ஆசிரியையான மூத்தவளும் முகாமைவிட்டு வெளியேறி மன்னாரில் தனது கணவருடைய குடும்பத்துடன் இணைந்து கொண்டார்;.

இவ்வாறாக வன்னி முகாம்களில் உள்ள 300 000 மக்களில் 200 000 மக்கள் முகாம்களைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டார்களா என்றால் அது மிக நியாயமான கேள்வியே?

Rehabilitation_Wanniஇன்றும் வன்னி முகாம்களில் 100 000 வரையானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 200 000 மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இப்போது வன்னி முகாம்களில் உள்ளவர்களின் நிலை ஒப்பீட்டு அளவில் பரவாயில்லாமல் உள்ளதாக அம்முகாமில் இருந்து உறவினர்களைச் சந்திப்பதற்காக வந்த ஒருவர் தெரிவித்தார். இதே கருத்தை வெளியிட்ட மற்றுமொருவர் தான் வேலை செய்வதற்காக வெளியே வந்ததாகவும் தங்கள் சொந்த இடத்திற்கே செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இவர்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பலவீனமானதாகவே இருந்தது. ஏதோ வாழ்ந்தாக வேண்டி உள்ளதே என்ற எண்ணமே ஏற்பட்டது. வன்னி முகாம்களில் கிடைக்கும் தேவைக்கு அதிகமான பொருட்களை விற்று தமக்குத் தேவையான பொருட்களை வாங்கும் நடைமுறையையும் வவுனியா நகரில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

Rehabilitation_Wanniவவுனியாப் பகுதியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடியேற்றங்கள் அடிப்படை வசதிகளற்ற மாட்டுத் தொழுவங்கள் என்றே சொல்ல முடியும். தலைக்குமேல் கூரை இருந்தால் அது மீள்குடியேற்றம் ஆகிவிடாது என்பதனை அரசு புரிந்துகொள்ளவில்லை. அரசின் எந்தவொரு கட்டிட விதிமுறையும் தற்போது மீள்குடியேற்றத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மனிதக் குடியிருப்புக்கு உகந்தது என்ற சான்றிதழை வளங்காது. இந்த மீள் குடியேற்றங்கள் துரிதகதியில் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றை தரமானதாக அமைக்க அரசு இதுவரை வன்னி மக்களுக்கு காத்திரமான உறுதி மொழியை அளிக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி இருந்தாலே அவர்கள் தங்கள் வாழ்வை புனர்நிர்மாணம் செய்திருப்பார்கள்.

Rehabilitation_Wanniவன்னி முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் குறிப்பிட்ட ஆசிரியையான மகள் சங்கத்தில் வேலை செய்த மகள் இருவரது குடும்பங்களும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளனர். இவர்களது தாயும் தந்தையும் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் மாறி மாறிப் பயணிக்கின்றனர். இவர்களில் ஆசிரியையான மகளுக்கு சில மாதங்களுக்கு உள்ளாகவே வெவ்வேறு இடங்களுக்கு ஆசிரியை வேலை மாற்றப்பட்டு உள்ளது. பிள்ளைகள் மன்னாரில் கல்வி கற்க. தாய் வவுனியாவில் கற்பிக்க தந்தை கிளிநொச்சியில் வேலை செய்ய அந்தக் குடும்பம் சிதறிப் போய் வாழ்கிறது. ஆசிரியை மன்னாருக்கு மாற்றலாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே அவரை கிளிநொச்சிக்கு மாற்றம். கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடைய இரு பிள்ளைகளின் கல்வியும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களால் நிலையான இடத்தில் இருந்து கல்வியைத் தொடர முடியவில்லை. குழந்தைகளுக்கு பெற்றோர் அண்மையாக இருந்தும் அவர்கள் இருவரும் அங்கும் இங்குமாக வாழ வேண்டிய நிலையுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த இம்மக்களுக்கு அவர்கள் செய்த கொடுமை அரசு மீதான எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தி உள்ளது. இவர்களிடையே பெரும்பாலும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைக்கு எதிரான உணர்வுகளும் அவர்களின் போராட்டத்தின் மீதான வெறுப்பும் மேலோங்கி உள்ளது. இந்த யுத்தத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் கூட மிகக் கடுமையான சொற்களால் புலிகளின் தலைமையையும் தலைவரையும் திட்டினர். அவற்றை இங்கு நேரடியாகக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்பதால் அவற்றைத் தவிர்க்கின்றேன்.

Rehabilitation_Wanniதன்னிறைவோடு அடிப்படை வசதிகளோடு வாழ்ந்த குடும்பம் இன்று மன்னாரில் கணவரின் குடும்பத்தினரின் உதவியால் அவர்களின் சமையலறையில் வாழ்கின்றனர். இப்போது அதுதான் அவர்களுடைய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை எல்லாமே. அதில் இரு பாக்குகள் (bags)) இருக்கும் அதற்குள் தான் அவர்களுடைய சகல பொருட்களும் வைக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்குள்ள ஒரே நம்பிக்கை அவர்கள் இருவருமே அரச உத்தியோகத்தர்கள் என்பதால் மாதம் தவறாமல் அவர்களுக்கு நிச்சயம் சம்பளம் கிடைக்கும். மற்றுப்படி காற்றில் அடிபட்ட பட்டம் போல் அவர்களுடைய வாழ்வு 2009 ஜனவரியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுள்ளது.

சங்கத்தில் வேலை செய்தவருக்கு இப்போது வேலையில்லை. அச்சகத்தில் வேலை செய்த கணவருக்கும் வேலையில்லை. அவர்களுக்குள்ள ஒரே சந்தோசம் அவர்களுக்குப் பிறந்த குழுந்தை சுகநலமாகப் பிறந்தது என்பது தான். மட்டுப்படுத்தப்பட்ட அரச உதவியில் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திருப்பிச் செல்வோம் என்ற ஏக்கத்தில் தினம் தினம் காலத்தை ஓட்டுகின்றனர்.

அரசாங்கத்தின் மீள் குடியேற்றம் என்பது அனுமான் வாலைப் போல் தொடரும் மீளாத்துயராகவே நீண்டு செல்கின்றது. தங்கள் சொந்த இடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் சிதறவிடப்பட்டுள்ள இம்மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வேரூன்றி வாழவே விரும்புகின்றனர். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காதவரை அரசின் மீள்குடியேற்றம் மீளாத்துயராகவே அமையும். இது அவர்களின் வாழ்நிலையை மேலும் மேலும் மோசமாக்கும்.

Rehabilitation_Wanniதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தங்கள் வாழ்வியலை அழித்துவிட்டதாக எண்ணும் வன்னி மக்கள் தங்கள் வாழ்வு பல ஆண்டுகளுக்கு பின் தள்ளப்பட்டு விட்டதாக உணர்கின்றனர். இப்படியெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் பிள்ளைகளும் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்க முடியும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த ஆசிரியையானவர். தங்களை கிளிநொச்சிக்கு செல்ல அனுமதித்தாலும் முதலில் தானும் கணவரும் சென்று நிலைமைகளைப் பார்த்து கண்ணி வெடி, மிதிவெடிப் பயங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பிள்ளைகளைக் கூட்டிச் செல்ல முடியும் என்கிறார் அந்த ஆசிரியை. அதுமட்டுமல்ல மீண்டும் பலவந்தமாக பிள்ளைகளை பிடித்து இயக்கத்தில் சேர்ப்பார்களோ என்ற பயமும் அவரிடம் இன்னமும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற அரசின் பிரச்சாரத்தை அவரால் முழுமையாக நம்பமுடியவில்லை.

ஆனாலும் தங்கள் சொந்த இடத்திற்குச் சென்றும் மீண்டும் தங்கள் வாழ்வை தாங்களே மீள்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கும் நாளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல இந்த மக்களின் நிலை இன்று. புலிகளின் கொடுமைகளிலிருந்து தப்பி அரசை நம்பி வந்த மக்களை, அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைத்து பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் அவர்கள் நல்வாழ்வு வாழ அரசு ஆவன செய்ய வேண்டும். வெறும் தேர்தல்களில் வெல்வது மட்டும் வெற்றியல்ல. மக்களின் மனங்களை வெல்லவதே முழுமையான வெற்றி. அதனை அரசும் உணர்ந்து செயற்படுமென்று நம்புகின்றோம்.

    Reply
  • lio
    lio

    மக்கள் முகாம்களில் இருக்கும்போது தம்மை சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என்ற ரிஎன்ஏ ரெலோ எம்பிக்கள் இன்று ஏன் இந்த மக்கள் இந்த நிலையில் அரசு வைத்துள்ளதை கண்டும் காணாமல் இருக்கிறாங்கள் இன்று வரையில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏன் தொடங்கவில்லை.

    என்ன? அடுத்த பாராளுமன்றக் கதிரைகள் கனவில் சங்கரியாரும் சம்பந்தரும் மிதக்கிறார்களோ இந்த மக்கள் இந்த கேவலமான வாழ்வில் இருந்து இந்த மக்களை காப்பாற்ற ஒரு பொது அமைப்பு உருவாக்க முடியாமலா வட்டுக்கோட்டை நாடுகடந்த தனித்தமிழீழம் வணங்காமண் என்றெல்லாம் விடுகிறாங்கள்

    இந்த மக்கள் வாழ இந்த கூடாரங்களை அமைக்க பணம் இல்லை 150 000 செலவு செய்து யாருக்கு வட்டுக்கோட்டை தீர்மானம் முட்டாள்த்தனமான கேலமான மட்டமான அறிவு இவர்களை விட்டு விலகாதா?

    Reply
  • nirmalan
    nirmalan

    புலிகள் பயங்கரவாதிகள் என்பதற்கான உறுதியான குற்றச்சாட்டுக்களே இவைகள்//

    ‘அவங்கள் எங்களை மனிசராயே நடத்தேல்லை’ என்று அவர் புலம்பினார். தங்கள் குடும்பத்துடன் தப்பியோட முற்பட்டவேளை சுடுவதற்கு துப்பாக்கியை லோட் பண்ணி நீட்டியபோது நாங்கள் இங்க இருந்து எங்கயும் போகமாட்டோம் என்று பிள்ளைகளையும் கட்டி அணைத்து கதறி அழுதாள் ஆசிரியையான மூத்த மகள். லோட் பண்ணிய துப்பாக்கியால் அருகில் நின்ற ஒருவரை சுட்டுக்கொன்றதாம் அந்தப் புலி.

    தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைக்கு எதிரான உணர்வுகளும் அவர்களின் போராட்டத்தின் மீதான வெறுப்பும் மேலோங்கி உள்ளது. இந்த யுத்தத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் கூட மிகக் கடுமையான சொற்களால் புலிகளின் தலைமையையும் தலைவரையும் திட்டினர். அவற்றை இங்கு நேரடியாகக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்பதால் அவற்றைத் தவிர்க்கின்றேன்.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தங்கள் வாழ்வியலை அழித்துவிட்டதாக எண்ணும் வன்னி மக்கள் தங்கள் வாழ்வு பல ஆண்டுகளுக்கு பின் தள்ளப்பட்டு விட்டதாக உணர்கின்றனர்.//

    புலிப்பயங்கரவாதிகளின் மிகமோசமான நடத்தைகள் இன்னும் அதிகம். புலிகளை இலங்கை அரசு அழித்திருக்காதவிட்டிருந்தால் இந்த தொடர்ச்சியான சிதைவுகள் வளர்ந்து கொண்டேயிருந்திருக்கும்.

    Reply
  • suman
    suman

    வெட்கமாக இல்லையா? இந்த மக்களுக்காக சேர்த்த பணங்களில் கூடி குடித்து திரியும் புலிக்கனவான்கள் இந்த மக்களின் கூடாராங்களுக்கு உதவக்கூடாதா?
    இதற்காகதானா போராட்டம் என்றும் புரட்சி என்றும் எங்கள் மக்கள் என்றும் தெருத்தெருவாய் கத்தினார்கள் ஊர்வலம் போனார்கள் நீங்கள் செய்தது எல்லாம் உங்கள் சுய நலத்திற்குப் ;பணம் சேர்க்கவே அதையும் இன்று நிரூபித்துள்ளீர்கள்

    Reply
  • john
    john

    தமிழுக்கு அந்தஸ்த்து வேண்டாம் அரசியல் உரிமை வேண்டாம் வடகிழக்கு இணைக்க வேண்டாம் இந்த மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ஒரு வேளை என்றாலும் கஞ்சியை என்றாலும் குடிக்க உதவி செய்யுங்கள் புலிகள் விட்ட அதே தவறை கூட்டணி-ரெலோ – ஈபி டிபி – புளொட் – ஈபிஆர்எல்எப் – சங்கரி – சம்பந்தர்- மகிந்தா – எல்லோரும் செய்கிறீர்கள் இதற்கும் காலம் பதில் சொல்லும் – இந்த மக்களின் வாழ்வின் கோலத்தில் யார் பணம் சம்பாதிக்கிறார்கள

    Reply
  • kalai
    kalai

    //வெட்கமாக இல்லையா? இந்த மக்களுக்காக சேர்த்த பணங்களில் கூடி குடித்து திரியும் புலிக்கனவான்கள் இந்த மக்களின் கூடாராங்களுக்கு உதவக்கூடாதா//

    சுமன் உள்ளூர் மக்களுக்கென்றால் குடுக்க நாம் தயார்.வெளியூரானுக்கு ஏன் கொடுக்கவேணும்? தலைவர் அல்லது சூசை வந்துகேட்டால் புலிப்பணத்தை கொடுக்கத்தயார் வெளியூரானை நம்பி நாம் கொடுக்க மாட்டோம் (டமில் ஈலத்திலுள்ள புலிப்பினாமி ஊர்மக்களால் சொல்லப்பட்ட உண்மையான செய்தி)

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /ஆனால் பிரபாகரன் என்பவன் ஒரு மலையாளியின் மகன் என்பது உண்மை. அந்தவகையில் “வல்வெட்டித்துறை” கள்ளகடத்தல் கேடிகளின் பல விளையாட்டுக்கள் “தமிழ்” என்ற போர்வையில் நடந்தேறின./– நந்தா!.
    /இந்த யுத்தத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் கூட மிகக் கடுமையான சொற்களால் புலிகளின் தலைமையையும் தலைவரையும் திட்டினர். அவற்றை இங்கு நேரடியாகக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்பதால் அவற்றைத் தவிர்க்கின்றேன்./– த.ஜெயபாலன்.

    தயவு கூர்ந்து, தற்போது நடந்தவைகளை, வருங்கால வரலாற்றை, யாழ்ப்பாண சூழலை அறிந்தவர்கள், சரியாக பதிவு செய்யுங்கள்!. வன்னி மக்களுக்கு புலிகளின்? தலைமை மீது வளர்ச்சியடைந்த வெறுப்பை, பல மூலங்கள் உறுதி செய்கின்றன!. நந்தா கூறியுள்ள மாதிரி, “தமிழ்” என்ற போர்வையை தங்கதுரை, குட்டிமணி, பிரபாகரனின் தாய் மாமன் போன்றோர்கள் தங்கள் தொழில் வாய்ப்புகள், “இருப்புகள்” பாதிக்கப்பட்டபோது, எதற்காக போர்த்திக் கொண்டார்கள்?, என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராயுங்கள்!. தற்போது கூட இந்த போர்வையை யார்மீது போர்த்தலாம் என்று அலைந்து கொண்டிருப்பதற்கான உதாரணங்கள்… “தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வாக தனித்தமிழீழமே அமையவேண்டும் என 1976 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப் பட்டிருந்தது. சுதந்திர தமிழீழம் தான் தேவை என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் தமிழ் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.” “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்– செவ்வாய், பிப்ரவரி 2, 2010”.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அடுத்து,மீள் குடியேற்றப்பட்ட மக்களின் அபிவிருத்தி பற்றியது!. புலன்பெயர் நாடுகளில் இத்தகைய கருத்து நிலவுகிறது.. /இதேவேளை வட கிழக்கு அபிவிருத்தி என்ற பெயரில் புலம் பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குழு இலங்கையில் முதலிடுவதற்கான வியாபார வாய்புக்கள் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. வட கிழக்கில் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உரிமை வேண்ட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படும் அபாயங்கள் காணப்படுகின்றன. மக்களின் உணர்வு அரசிற்கும் அதன் துணை இராணுவக் குழுக்களுக்கும் எதிராக அமைந்துள்ள நிலையில், உருவாகும் எதிர்ப்பை எதிர் கொள்வதற்கான சந்திப்பாகவே கருணாநிதி மேனன் சந்திப்பு கருதப்படுகிறது.

    இந்தியப் பழங்குடி மற்றும் ஆதிவாசிகள் மீது அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் தாக்குதல் நடத்தி வரும் இந்திய அரசு அதே வழிமுறையை ஈழத் தமிழர்களுக்கும் எதிராகக் கையாளும் முன்னறிவிப்பா இச்சந்திப்பு என ஐயங்கள் தெரிவிக்கப்படுகின்றன./– இது இந்தியாவில் செல்வி அருந்ததி ராய் போன்றோர்களின் கருத்து போல் உள்ளது.

    நாடுகடந்த தமிழீழ அரசே, ஒரு என்.ஜி.ஓ. போன்று,கிடைக்கும்? நன்கொடைகளை “சேனல்” செய்யும் ஒரு பொருளாதார முகவர்களாகவே இயங்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது!. இந்திய அபிவிருத்தி இயந்திரம், கணெக்கெடுக்கக் கூடிய அளவில் செயல்படும் என்றாலும், அதன் “பியூரோகிராசி” நகருவதற்கு காலம் பிடிக்கும். வன்னி மக்களின் சுகாதாரமற்ற, வசதி குறைவான மீள்குடியேற்றம் தற்காலிகமானதே!. இந்தியாவில் இதை விட வசதி குறைவானவர்கள் இருப்பதால், இந்தியாவின் “சென்ஸிட்டிவிட்டி” சந்தேகமானதே!. நான் இதைக் கூறிவிட்டேன் என்பதற்காக, மொளு, மொளு வென்று, “இந்தியாகாரன்கள், எங்களை இந்திய சேரி நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை முன்வைத்து” பிடித்துக் கொள்ளக் கூடாது!. விஷயங்கள் “டெவலப்” ஆனது மெதுமெதுவாகத்தான், இலங்கை வன்னிப் பகுதியின் இயற்கையான வளங்கள் இவைகளை தன்னகத்தே சரி செய்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இதில் அரசியல் இலாபம்(அருந்ததி ராய்?) தேட முயற்சிப்பவர்கள் பற்றி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன், ஏனென்றால், இதன் பலாபலன்களைப் பற்றி சுயமாக சிந்திக்கவேண்டியது சம்பந்தப் பட்டவர்கள்தான்!.

    Reply
  • BC
    BC

    DEMOCRACY யின் கோரிக்கை நியாயமானது.

    Reply
  • msri
    msri

    ஆறிய கஞ்சி பழங்கஞ்சி> வன்னிமக்களின் மீள் குடியேற்றமும் இந்நிலைதான். மகிந்தாவின் பிரதான வேலை “கணணி மாயாஜாலத்திற்கு ஊடாக” கச்சிதமாக நிறைவேறியுள்ளது. பொதுத்தேர்தலிலும் மக்கள் வாக்களித்தாலும் -விட்டாலும் மூன்றில் இரண்டுடனான வெற்றிக்கு வியூகம் வகுக்கப்பட்டுவிட்து. ஜனாதிபதித் தேர்தலில் தோல்விக்கான தடுமாற்றத்திற்கூடாகவே பலவிடயங்கள் செய்யப்பட்டன. மீள்குடியேற்றம்> மட்டுமல்ல புலி-இளைஞர்கள் விடுதலை பிரபாகரனின் தாயார்கூட இந்தியா போகலாம் என்ற தாராள மனசு. எதிர்காலத்தில் இவைகளை எதிர்பார்த்தால் அதை அரசியல் தெளிவீனமே. வடக்கின் வசந்தமும் பட்டது போதும் என்னால் முடியாது என புறியம் காட்டும். புலம்பெயர்வில் புற்றீசல்கள் போல் புறப்பபட்டார்கள்> மகிந்தா எங்களுக்கு எம்மாத்திரம் பாருங்கள் எங்கள் மீள்குடியேற்றத்தை என்று! இப்படி…..இப்போது மக்களின் அவலத்தில் மவுன இன்பம் காண்கின்றார்கள.

    Reply
  • NANTHA
    NANTHA

    நாங்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் கனடாவிலுள்ள ஒரு யாழ்ப்பாணத்து வியாபாரி நடிகை ரம்பாவுக்கு திருமணப் பரிசாக இந்திய ரூபாய் ஒன்றரைக் கோடிக்கு பெறுமதியான கார் ஒன்றை அன்பளிப்பு செய்திருக்கிறார். இவர் புலிகளுக்கும் “அள்ளி” வீசியவர். இது எப்படியிருக்கு?

    Reply
  • ruban
    ruban

    //சனங்கள் தப்பியோடத் தயாராய் நிற்கின்ற இடங்களில் எல்லாம் தங்கள் குறும்தூர செல்களால் புலிகளே மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளதாயும் அவர்கள் கூறுகின்றனர். அந்த யுத்தத்தில் அரசாங்கமும் புலிகளும் மக்களுக்கு எதிராக கொலைத் தாக்குதலை நடாத்தி உள்ளனர்.//
    this is true many vanni peoples said this.

    Reply
  • ராபின் மெய்யன்
    ராபின் மெய்யன்

    தமிழ் தேசியத்தின் வன்முறை வடிவம் முள்ளிவாய்க்காலில் வன்முறையால் தோற்கடிக்கப்பட்டு தலைவர்களும் ஆலோசகர்களும் சரணடைந்தும், தப்பியோடியும், புதைக்கப் பட்டும் உள்ள நிலையில், இலங்கைத் தீவின் தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கும் இன்றைய உடனடித் தேவை என்ன?

    புலம்பெயர் உறவுகள் பல மணிநேரம் வரிசையில் நின்று வட்டுக் கோட்டைத் தீர்னமானத்தின் மீது அளிக்கும் வாக்கா? புலம் பெயர் உறவுகள் பெருமளவில் வந்து குவிந்து நடாத்தும் அபிவிருத்தி மாநாடுகளா?

    தமிழன் அல்லது சிறுபான்மை இனத்தவன் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப் பட்டு வருடக் கணக்கில் சிறையில் அடைக்கப் படுவதும், கொலை செய்யப்படுவதும், அவற்றிற்கான காரணங்கள் பாரபட்சமற்ற முறையில் விசாரிக்கப் படாமலிருப்பதும் இன்னமும் தீர்க்கப் படாமல் இருக்கும் தீவிரமான பிரச்சனை இல்லையா?

    இவை இன்னமும் சாதாரண மக்களது மனங்களை வாட்டும் பாரிய பிரச்சனை இல்லையா? இவர்கள் இலங்கையின் குடிமக்கள் எனில், இவர்கள் உயிருக்கான உத்தரவாதத்துடன் வாழும் நாள் என்று வரும்? தமது ஜனநாயக உரிமைகளை எவ்வித உயிர்ப் பயமும் இன்றி சிறுபான்மை மக்கள் பயன்படுத்தக் கூடிய நாள் என்று வரும்?

    இன்றுவரை நீடிக்கும் மர்மக் கொலைகளுக்கு வட்டு. தீர்மானத்தின் மீதான வாக்கும், அபிவிருத்தி மாநாடுகளும் நல்ல பதிலைத் தர முடியுமா?

    Reply