போதி மாதவா? : நோர்வே நக்கீரா

Budha_in_Jaffnaபோதி மாதவா?

வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்

சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்

குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.

கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்

விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை

உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.

வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.

தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.

கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்

புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்

அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.

உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்

உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்

மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.

நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!

மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.

விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி

”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக

எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?

விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்

அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்

மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”

மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • saleem
    saleem

    யாதும்ஊரே யாவரும் கேளீர்
    தமிழன் அன்று இன்று என்றும்
    மாதவன் திருக்குறள்
    மாண்பை உணர்வோம்

    எம்மவர் இன்றே வாழ
    இனிதாய்வாழ
    இன்றே இணைவோம்.

    Reply
  • Nackeera
    Nackeera

    சலீம்! நன்றாகச் சொன்னீர்கள்: தனித்துவம் என்று பிரிந்து பிளந்தது போதும். இனியாவது மனிதர் என்று இணைவோம். ஏன் இந்த மனிதசமூகம் குறுகிப்போக விரும்புகிறதோ. இதனால் சாதித்தது எதுவுமே இல்லை. சாதி இனம் மதம் என்று குறுகி இணைவதை விட இலங்கை மனிதம் என்று இணையலாம் அல்லவா.

    Reply
  • பல்லி
    பல்லி

    வன்னியின் நிலப்பரப்பு
    வளமான பசுமைக்கு – அன்று
    வந்தோரை வாழ வைத்த
    வரலாற்று பூமி அது:

    எவறேஸ்ட் சிகரம் போல்
    அரசின் வெற்றி அத்தனையும்
    சீனப் பெரும் சுவரா???
    வடகிழக்கு பிரிவினை:

    சாய்ந்த கோபுரம் போல்
    டெல்லியின் நிலைப்பாடு
    பிரமிட்டின் கூர்மை போல்
    சீனாவின் செயல் திட்டம்:

    ஈவில் ரவர் போல்
    கூட்டமைபின் பேச்சு மட்டும்
    தாஜ்மகால்நினைவு போல்
    மீள் குடியமர்வுகள்:

    தொங்கு பாலம் போல்
    எதிர்கட்சி தொங்குகிறது
    இலங்கை வாழ் சதாமாக
    மகிந்தா வலம் வரலாம்:

    இத்தனையும் எதுக்கிங்கு
    என்று சிலர் கேக்காலம்
    எட்டாவது அதிசயமே
    உருத்திரகுமார் பிரதமர்
    என்பேன்

    அழகான பனை மரங்கள்
    பாட்டுக்காய் இனி வேண்டாம்
    அத்தனையும் வேண்டும்
    அங்கு
    அவர்களது வாழ்வுக்காய்:

    மக்கள் பணத்தில் பல கப்பல்
    அன்று
    அத்தனையும் அரசிடம் அமைதியாய்
    இன்று
    ஓடாத ஆற்றிலே -கே பி
    நீந்தாத மீன் போல- ஆகிவிட்டார்:

    வன்னி ஒரு தீவு என
    வருங்காலம் கூறலாம்
    வங்கம் தந்த பாடம்போல்
    வரலாற்றை எழுதிவிட்டால்;

    நட்புடன் பல்லி;

    Reply
  • thodda
    thodda

    சித்தரா?? பித்தரா??
    கடவுள் இல்லை கடவுள் இல்லை
    என்றான் புத்தன் – அவனே
    கடவுள் அவனே கடவுள்
    என்கிறார்கள் அவரது வாரிசுகள்:

    ஆசையை துறந்து அரசியலே
    வேண்டாமேன சென்றான் – புத்தன்
    ஆனால் ஆசையில் விழுந்து
    அரசியலில் தவழ்கின்றனர் பிக்குகள்
    எத்தனை அநியாயங்கள்:

    சிங்களவருக்கு யாழ்ப்பாணத்தில் வசிக்க
    வசதிகள் தேவைகள் அறிய
    அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றார்கள்
    கம்பி வேலிக்குள் இத்தனை நாளாய்
    தவிக்கும் நாதியற்ற தமிழனை யார் பார்ப்பார் கேட்பார்??

    யாழ்ப்பாணத்தில் தங்கள் வாரிசுகள்
    வழமுடன் வாழ
    விகாரைகலும் புத்தர் சிலைகலும்
    விமான நிலயங்கள் நிறுவ -அன்னியவன்
    தமிழனுக்காய் கொடுத்த பணம் தான் வேண்டுமா?

    பச்சை பசேலென பச்சை கம்பளம்
    விரித்தது போன்று தன் சொந்த
    விவசாயத்தில் குதூகலத்துடன்
    தவழ்ந்து திரிந்த தமிழனை – ரத்த
    வெள்ளத்தில் மிதக்க வைத்தது போதாதா??

    தமிழனை முள் வேலிக்குள் வைத்து
    அவனது இடத்தில் தங்களது
    வாரிசுளை குடியமர்துவதில்
    என்ன நியாயம்??

    கண் தெரியாத கண்காணிப்புக் குழூ
    காது கேட்காத மனித உரிமை குழூ
    ஊமையனா ஐநா – எல்லாருக்கும்
    இனிமேல் ஆவாது ஊனம்
    மறைந்து உண்மையை தட்டிக்கேட்குமா???

    மக்களை தங்களது சொந்த நிலத்தில்
    அவர்கள் சுமூகமாக வாழ வைத்து விட்டு
    தமிழீழத்தை பற்றி யோசியுங்கள்
    நாடு கடந்த தமிழீழ நாடக
    தலைவரே, பிரதமரே, மக்கலே…

    பாஞ்சாலி சபதத்தில் தூரியோதனன்
    பரிவாரங்கள் போல
    இலங்கையில் ஈழத்தை அழிக்கும்
    நாசிகள் என்றோ ஒரு – நாள்
    இயற்கையால் ஆவது அழிக்கப்படுவோம்..

    ஈழத்தமிழனின் கண்ணீர் எங்கே
    போனது என்று யோசிக்கின்றீர்களா??
    கண்ணீர் தண்ணீராக – ஆகாயம்
    மூலம் சென்றது பாகிஸ்தானுக்கு
    வெள்ளமாக………
    ஈழத்தமிழனை இனிமேலும் வருத்தாதீங்க…

    புதுமுகம்
    தோட்டா..:)

    Reply
  • Nackeera
    Nackeera

    பல்லி- இறுதியாக நீங்கள் எழுதிய கவிதையில் உவமானங்கள் துள்ளி விளையாடுகின்றன. பலர் எண்ணுகிறார்கள் முறித்து முறித்து எழுதுவதுதான் கவிதை என்று. கவித்தன்மை முறியாது எழுதுவதே கவிதை. உருவம் முக்கியமில்லை. கருத்தும் கவிநயமுமே அவசியம். தொடருங்கள் பல்லி.

    தமிழர்களின் வரலாறுகள் கவிதைகளாகவே எழுதப்பட்டன. தமிழர்களின் வரலாற்றுச் சான்றிதழ்களை கவிதைகளே கொடுக்கின்றன. பாமரரும் இசைக்கேற்ப கருத்திரைத்துப் பாடியபாடல்கள் கூடக் காலப்போக்கில் படித்தவனுக்கு மட்டுமே என்றானது. தேசத்தில் ஆரம்பத்தில் பின்னோட்டம் காணாது இருந்த கவிதைகள் புத்துயிர் பெற்று பலபின்நோட்டங்களுடன் புதியவர்களும் சரியோ பிழையோ எழுத தேசம் வாய்பளிப்பது பாராட்டுக்குரியதே.

    Reply
  • palli
    palli

    தோட்டா தேசத்துக்கு புது முகமா?
    அல்லது கவிதைக்கு புதுமுகமா??
    கவிதைக்கு புதுமுகமாக என்னால் சொல்ல முடியவில்லை; காரணம் நானும் புதுமுகம்தானே, ஆனால் தேசத்துக்கு புதுமுகமாயின் வாழ்த்தி
    வரவேற்ப்போம்; கவிதையில் அவரது வலி புரிகிறது ,மனித நேயம் மட்டுமே தெரிகிறது;
    தொடரட்டும் தோட்டாவின் வலிகள்.

    Reply
  • karu
    karu

    யாழில் முதல்வராய்
    முஸ்லீம்வரட்டுமாம்
    மூதூரில் தமிழனுக்கு
    இடமே இல்லையாம்
    எல்லோருக்கும் எல்லாம்
    இலங்கையில் வேண்டும்
    தமிழன் நிலம்
    தமக்கே வேண்டுமாம்
    தமிழனோ நாடில்லா
    அகதியாக
    ஓடிவிட எல்லோரும்
    கூத்தாட
    இடம் வேண்டும்
    அது தான் இலங்கையாம்
    சிங்கள சிறிலங்காவிற்க்கு
    இலங்கை மஸ்லீமுக்கு
    தமிழனுக்கு போதிமரம்
    நடுக்கடலா?
    புத்தனே பதில்கொடு
    போதிமரம் உனக்கு மட்டுமல்ல
    இன்று தமிழனுக்கும்
    தான்
    நம்பிக்கை
    உதிக்கும்
    முழு பிரளயத்திற்க்கும்
    கடவுள் பொய்யாகும்
    சமயம் சாகும் சாதி சாகும்
    மனிதம் தளைக்கும்

    Reply
  • Nackeera
    Nackeera

    தோட்டா தோட்டாவாக
    வேட்டாக விழுகிறது.

    புதுமுகமாயினும்
    திருமுகமாகுக.

    சித்தரா பித்தரா?
    சித்தாத்த புத்தரா?

    Reply
  • thodda
    thodda

    மிக்க நன்றி பல்லி, நக்கிரா இரண்டு பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்களைப்போன்று எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன்:
    புதுமுகம்
    தோட்டா

    Reply
  • Nackeera
    Nackeera

    கரு தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத எழுதும் தன்மையும் கவித்துவமும் மெருகேறும். கருத்துக்களை சொல்கிறீர்கள் கற்பனையுடன் கலந்து அணிளைப்பிசைந்து தந்தால் இன்னும் நன்றாக இருக்கும். எழுத்து வன்மை இருப்பதனால் எதிர்காலம் வெளிச்சமாகவே இருக்கிறது

    Reply