போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை- தமிழ் கட்சிகளின் அரங்கம்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை என தமிழ் கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளும். வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கும் உதவிகள் முறையாக அம்மக்களுக்கு சென்றடைவதில்லை எனவும், இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஒன்பதாவது கூட்டம் கொழும்பில் ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகளில் அரைவாசியே சென்றடைவதாகவும் இப்பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதெனவும், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட முடியாவிட்டால் சாத்வீக ரீதியாக போராட்டங்களை நடத்துவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதே வேளை, தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஒரு தீர்வினைக் காண ஒத்துழைக்க வேண்டுமென இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைவது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அறிவிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயலாளரும், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுடனான சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் தலைவர் எம்.கே சிவரிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *