நிதி மோசடியுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

TNA_Logoநிதி மோசடி காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் பொலிஸாரினால் கைது செய்யப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பெருந்தொகையான பணத்தை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டதாகவும். மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதெனவும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியிலுள்ள ஒருவரே இம்மோசடியின் பிரதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தொலைபேசி இலக்கங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போனவர் ஒருவரின் உறவினர் இத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்ச ரூபா வரை கொடுத்துள்ளார் எனவும், இன்னொருவர் 75 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார் எனவும், இந்த மேஜர் ஜெனரலின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயலிழந்துவிட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என வவுனியா மற்றும், மன்னாருக்கான பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்தள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இன்றைய ‘தினமுரசு’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • Rohan
    Rohan

    அடேங்கப்பா… பணமோசடி செய்வது இலங்கையில் ஒரு குற்றமாமே!

    நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எப்படிப் பணக்காரர் ஆனார்கள் என்று அறிய எனக்கும் ஆவல் தான். ஆனால், ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பது போல இருக்கும் நிலைமையில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்?

    Reply