வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *