”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

No_Future_Without_Forgiveness”நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் (Truth and Reconciliation) உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” என அமெரிக்காவில் இருந்து யாழ் திரும்பியுள்ள பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தமிழீழ விடுதலைப் புலிகளினன் கொலை மிரட்டல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

பேராசிரியர் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்களின் சுருக்கும் மட்டும் கீழ்பதிவிடப்படுகிறது. அவருடைய சாட்சியம் முழுமையாக ஆங்கிலத்தில் LLRC_Testimony_By_Ratna_Jeevan_Hool இணைக்கப்பட்டு உள்ளது. (இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. சாரம்சம் மட்டுமே.)

”நான் ஒரு இலங்கையன். ஒரு தமிழன். நான் உள்ளக சுயநிர்ணய உரிமையை இதயபூர்வமாக ஆதரிப்பவன். இந்த அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் இவ்வாறன ஒரு அதிகாரப் பரவலாக்கலுக்காக (மத்தியில் கூட்டாச்சி. மாநிலத்தில் சுயாட்சி) பாடுபடுபவர்.

யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் எப்போதும் அரசாங்கத்துடன் இணங்கி இருக்கவே விரும்பி உள்ளனர். அல்பிரட் துரையப்பா வுக்கும் அப்போது மூன்றில் ஒரு பகுதி யாழ்ப்பாண மக்களின் ஆதரவு இருந்தது. அண்மைய தேர்தலும் இதனையே காட்டி உள்ளது. இது தமிழ் தேசியவாதம் வெட்கப்பட வேண்டிய உண்மை.

என்னைப் போன்ற இலங்கையனாகவும் தமிழனாகவும் உள்ளவர்களுக்கு இது கடினமான காலம். அரசாங்கத்தில் எண்ணிக்கையில் குறைந்த சிலர் தமிழர்களுக்கு தாயகப் பிரதேசம் இல்லை என்கின்றனர். இது சிங்கள தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். அதனாலேயே கடந்த 50 ஆண்டுகால துயரம் நிகழ்ந்தது. எல்ரிரிஈ வளர்ந்தது. தமிழ் – சிங்கள இனவாதம் ஒன்றையொன்று வளர்த்தது.

எனக்கு இந்த அரசாங்கத்திலும் அதன் ஸ்தாபனங்களிலும் குறைந்தபட்ச நம்பிக்கையே உள்ளது. ஆணைக்குழுக்களை உருவாக்கி காலத்தை இழுத்தடித்து அதனுடைய ஆலோசணைகளை நடைமுறைப்படுத்தாமல் அவை எங்களுடைய வரலாற்று குப்பைகளாக அக்கப்பட்டு உள்ளன. சன்சோனி ஆணைக்குழு அறிக்கை ஒரு போதும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவ்வாறே திருகோணமலையில் அக்சன் எய்ட் உறுப்பினர்களின், 5 மாணவர்களின் கொலை தொடர்பான விசாரணைக் குழுக்கள்.

இந்த யுத்தத்தின் முடிவுடன், 1970ற்குப் பிறகு யாழ்ப்பாணம் ஓரளவு சுதந்திரமாக உள்ளது. அதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி அனைவருக்கும் பொதுவான ஒரு தேசத்தை உருவாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர்கள் ஜனாதிபதியின் சிந்தனைக்கு மாறாக செயற்படுகின்றனர்.

எனது அனுபவத்தில் இங்குள்ள செயற்தளத்திற்குள் நாம் செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நான் அந்த செயற்தளத்திற்குள்ளேயே சட்ட நடவடிக்கை எடுத்து நீதியைப் பெற்றுக்கொண்டேன். இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டைக் கட்டியமைக்க, ஜனாதிபதி இலங்கையர் அனைவருக்கும் அழைப்பு விட்டபோது, நானும் இலங்கைக்கு வந்தேன். பலரும் வருவதற்கு ஆவலாக உள்ளனர். ஆனால் இங்கு சட்டத்திற்கு வெளியேயான தடைகள் பல. யாழ் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாகப் பேராசிரியராக நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியபடி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டும், கடந்த மூன்று மாதகாலமாக நியமனத்தை வழங்க, யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்து வருகின்றது. இலங்கையில் குறிப்பிட்ட தகமையுடைய ஒரே பேராசிரியராக உள்ள எனக்கு அறிவியல் தேர்ச்சிக்கும் தகமைக்கும் பெரும் தேவையுள்ள பிரதேசத்தில், நியமனத்தை வழங்கப் பின்னடிக்கிறார்கள். இதற்கு இனவாதம் காரணமல்ல. ஜனாதிபதி வரை தொடர்புடைய எனக்கு இவ்வளவு தடைகள் இருந்தால் சாதாரண ஒரு தமிழன் உடைய நிலை என்ன?

அதனாலேயே ஆளப்படுபவர்கள் அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரப் பகிர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2006ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட எனக்கு, எல்ரிரிஈ ஆல் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கு இராணுவ பாதுகாப்புத் தரவும் முன்வந்தார். ஆனால் அவ்வாறான ஒரு சூழலில் பணியாற்ற என்னால் முடியவில்லை. நான் கொழும்பில் இருந்து செயற்பட முயன்ற போதும், அதுவும் முடியவில்லை. அதனால் நாட்டைவிட்டு வெளியேறினேன். அப்போதைய ரிஎன்ஏ எம்பி கஜேந்திரன், எல்ரிரிஈ அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் எனக்கு எதிராக கடுமையாகச் செயற்பட்டனர்.

இவ்வாறு முக்கிய விடயங்களை தீர்மானிப்பது ஒரு சிலரின் கைகளிலேயே இருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் தனிப் பல்கலைக்கழகங்களாக வளர்ச்சி அடைந்த போதும் வவுனியா கம்பஸ் திருகோணமலைக் கம்பஸ் என்பன தனிப் பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கப்படவில்லை. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை விரும்பிய போதும் தமிழ்ச்செல்வன் பிரதேசம் வாதம் கதைப்பதாகக் கூறி அதனை நிறுத்திவிட்டார்.

ஒரு தமிழனாக இது எனக்கு ஒரு வேதனையான காலம். தமிழர்களுக்கு விடுதலை என்ற பெயரில், எங்களுடைய அத்தனை நிறுவனங்களையும் – பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள், தேர்தல் முறை, எங்களிடம் என்ன இருந்ததுவோ அனைத்தும் மத்தியப்படுத்தப்பட்ட உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கீழ்ப்பணிய நிர்ப்பந்திக்கப்பட்டது. சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் எங்களைப் பாதிக்கின்ற முடிவுகளை ஒரு சிலரே எடுத்தனர்.

இது முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியானது. இப்பொது அரசாங்கம் சுயநிர்ணய உரிமையை அளவுக்கு வழங்கப் போகிறதா இல்லையேல் பழைய விடயங்களுக்கு புதிய எஜமானர்களாக அரசாங்கம் இருக்கப் போகிறதா?

நாங்கள் இன்று வாழ்கின்ற அவலத்திற்கு தமிழ் பாராளுமன்றத் தலைவர்களுடைய தவறான தலைமைத்துவமும் காரணம். ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும், கள்ள வாக்குகளுடன் ரிஎன்ஏ எம்பி க்களாக வந்தவர்களை தம்மத்தியில் ஏற்றுக்கொண்டதால் எங்களைத் தவறவிட்டனர். இவர்கள் அரசியலில் இருந்து சாதாரணமாக ஓய்வு பெற்றிருந்தாலே தலைமைத்துவப் பண்பை பேணியதாக இருந்திருக்கும். அது தமிழ் ஏகபிரதிநிதித்துவம் எதிர்கொள்ள வேண்டிய முடிவை விரைவுபடுத்தி இருக்கும். தமிழரசுக் கட்சியில் பல தவறுகள் இருப்பினும் தமிழர்களிடையே அவர்கள் ஆழ வேர்விட்டள்ளனர். இனி அவர்களைக் கடவுள் வழிநடத்துவாராக.

நோர்வேயின் மத்தியஸ்துவமும் அவர்கள் கூறுகின்ற சமாதானம், நீதி, மனித உரிமைகள் சந்தேகத்திற்கு உரியதே. அவர்கள் எல்ரிரிஈ இன் மீறல்கள் பற்றி குறிப்பாக என்னுடைய உபவேந்தர் நியமனத்தில் எல்ரிரிஈ இன் தலையீடு பற்ற அக்கறைகொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினையைத் தாண்டுவதற்கு ரிஎன்ஏ ஜனாதிபதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நான் உண்மையிலேயே நினைக்கிறேன். இந்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா அரசியலை சரியாகவே புரிந்துகொண்டுள்ளார். ஆனால் தமிழரசுக் கட்சியும் ரிஎன்ஏ யும் இதனைத் தவறவிட்டுள்ளனர்.

அரசாங்கம் மதிப்பிற்குரிய தமிழ் தலைமைகளை உருவாக்குவதில் அக்கறையுடன் இருக்கின்றதா என்ற சந்தேகம் எனது சிந்தனையில் எழுகிறது. ஒரு காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. ஆனால் அவர் தனது கடுமையான உழைப்பினால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். கூடுதலான விருப்பு வாக்குகளை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கி உள்ளனர். தனது உயிராபத்துக்கு மத்தியிலும் அரசாங்கத்துடன் நின்ற டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து இப்போது அரசாங்கம் தன்னுடைய விசுவாசத்தை திருப்புவதையே உணரமுடிகிறது. இது எப்படி ஏனைய தமிழர்களை அரசாங்கத்துடன் இணைய வைக்கும்?

No_Future_Without_Forgivenessகடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் பத்து ஆயிரங்கள் என்று இரு தரப்பாலும் மக்கள் கொல்லப்பட்டதை நான் உறுதியாக நம்புகிறேன். குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லோரையும் தண்டிக்க முற்பட்டால், தண்டிக்கப்படுவோம் என்று அஞசுபவர்கள் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும். தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் சொந்தங்களை இழந்தவர்கள் ஒரு அமைதியைப் பெறுவார்கள்.

அரசாங்கம் உண்மையில் ஆர்வமாக இருந்தால், எதிர்கால சட்டங்கள் திருத்தங்ககள் பற்றிக் கதைப்பதை விட்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.உதாரணமாக 13வது திருத்தம், மொழிச் சட்டம் என்பன. இது நடைபெற்ற பின் அரசு உறுதியானதாகும் நீங்கள் எதிர்பார்க்கின்ற கலந்துரையாடலுக்கான நேரம் கனியும்.” என்று நீண்டதொரு சாட்சியத்தை பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வைத்தார்.

2006ல் உபவேந்தர் பொறுப்பை தொடர முடியாத நிலையில் தனது சேவையை யாழ் கல்விச் சமூகத்திற்கு தான் பிறந்த மண்ணுக்கு வழங்க பேராசிரியர் ஹூல் ஊர் திரும்பியுள்ளார். தற்போதைய உபவேந்தர் தெரிவுக்கான பட்டியலில் கூடுதல் தகமையும் நிர்வாகத்திறமையும் உடைய பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்டுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும். தமிழ் மக்களின் கல்விநிலை கடந்த காலங்களில் கல்விக் கட்டமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களின் பொறுப்பற்ற தன்மையினால் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. அதனை தடுத்து தமிழ் கல்விச் சமூகத்தை மீளுயிர்ப்பிக்கும் ஒருவரை பொறுப்புவாய்ந்த பதவியில் நியமிக்க இன்றைய அரசியல் தலைமைகள் ஆதரவளிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • mahintha
  mahintha

  பண்டைக்கால பெருமைகளையும் புறநானூற்று வீரங்களையும் கதைத்து காலத்தை ஓட்டிவிட்டு… கல்வி இல்லாத சமூக மாற்றங்களுடன் போட்டி போட முடியாது. ஒரு இனத்தை அழிந்து கொண்டு-உருமாறிக் கொண்டிருக்கிற ஒரு இனத்தை காப்பாற்றி விடவும் முடியாது. ஒரு இனத்தில் தோன்றிய பழமைவாதப் போக்கால் சிந்தனையால் தம்மை இனங்காட்டிவர்கள் எண்பது காலப்பகுதியில் ராஜன் கூல் எம் இனத்தில் அறிவாளிகளாக இனம் காணப் பட்டார்கள். இது அப்படியே இருக்க….
  முப்பது வருடங்கள் நடத்தி முடிக்கபட்ட ஊள்நாட்டு போரில் சிங்களஅரசும் சிங்கள ஆட்சியுமே காரணம்மென்று கருதுவார்களே யானால் அது முட்டாள் தனம். இதை விவாதிக்க இது இடமல்ல.
  போட்டி போடுவது என்பது….? கல்வியறிவு தேவை என்பதையே திரும்பத் திரும்ப விளம்பும்.
  பல்களக்கழகங்கள் அந்தநாட்டின் அறிவுதகமையை எடுத்துரைப்பவையே!. அது வளரும் போது தான் அந்த நாடும் வளர்ச்சியை காணமுடியும். அதை யாரும் கட்டுப்படுத்த நினைக்கிறார்களோ அறிவை கட்டுபடுத்துகிறார்கள் நாட்டை பின்தள்ளுகிறார்கள் என்பதே அர்த்தமாகிறது. பல்களகழகத்தை கடந்த இருசதாப்கங்களாக அதாவது மேமாதம் 19ம் திகதிக்கு முன்பாக ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் பழைவாதிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாவிட்டாலும் இருக்க வில்லையா? அப்படியிருக்கும் போது ஒரு பல்கலைக்கழகம் அதன் சுகந்திரப் போக்கை எப்படி எதிர்பார்க்க முடியும்?.
  இந்த வன்முறைப் போக்கை எதிர்காமல் அங்கு ஊழல் நடக்கிறது. பாலியல் வன்முறை நடக்கிறது என்பதில் கூச்சல் போடுவதில் எந்த அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
  பல்களை கழகத்தை பற்றிய வந்த கட்டுரைக்களில் இப்படியான அர்த்தம் தொனிபட இருப்பதாகவே நான் கருதுகிறேன். தெரிவு செய்யப்பட்ட உபவேந்தர் மூவருள் யார்வந்தாலும் யாழ்.பல்களைக்கழகம் தன் சிறப்பான இடத்தையே தேடிச்செல்லும். அது இப்பொழுது சுகந்திரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது. துன்பங்களை முழுமையாக அறிந்தவன் துணிந்தவன் என்கிற வகையில் ராஜன் கூல் தகமையானவராக தெரிவாகும் போது இன்னும் மெருகு சேர்க்கும். இங்கு வடக்கோ தெற்கோ சிங்களவனே தமிழனோ- மூஸ்லீமோ என்தல்ல நாட்டின் அறிவைப் பற்றிய-அதனால் வளரப்போகிற மனிதநேயத்தைப் பற்றிய பிரச்சனை. விடை எப்படியிருந்தாலும் கைகொட்டி வரவேற்போம்.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  ஒரு பேராசிரியருக்குரிய பெருந்தன்மையான, அறிவுசார் சாட்சியமாகப் படவில்லை.தென்னாபிரிக்க உதாரணம் இலங்கையுடன் பொருந்தக் கூடியதல்ல. அடக்கப்பட்ட இனம் செய்ததை, அடக்கும் இனத்திடம் எதிர்பார்ப்பது பொருந்தக் கூடியதா?

  “……..First, as a member of the wider Christian Church,………”
  தனது சொந்த நலனை முன்னிறுத்திய சாட்சியமளிப்பு, தமிழினத்திற்கு எதுவும் செய்யாது எனினும், தன் எதிர்கால எதிர்பார்ப்பிற்கு திருப்பு முனையாக அமையுமா என்பதே எம்முன்னே உள்ள கேள்வி.

  Reply