பெய்ரூட் வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர்!

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்கள் ஆகியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெய்ரூட் நகர ஆளுநர் அப்பவுட் கூறும்போது, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களாகியுள்ளனர். மேலும் இந்த வெடி விபத்து காரணமாக 3.5 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் பல  பேர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெடி விபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயமாகி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *