மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்

நாட்டில் நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியமெனவும் தற்போது நடைமுறையிலுள்ள கல்வி முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதால் மாணவர்கள் உரிய முறையில் தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதையும் புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று (18.08.2020) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்த அமைச்சர்,

கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கல்வி முறை நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அதற்கிணங்க அடுத்த மாதம் நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பாடநெறிகளை நவீனமயப்படுத்துவது, பாடங்களின் எண்ணிக்கை, பாடவிதானங்களின் தன்மை, கற்பிக்கப்படும் முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போதே மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து தைரியத்துடன் கற்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதையாவது சிந்தித்துக் கொண்டு பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல.எமது நாட்டில் அதுபோன்றதொரு கல்வி முறையே உள்ளது. சகல குறைபாடுகளும் நீக்கப்படவேண்டும்.

புதிய விடயங்கள் உள்ளீர்க்கப்படவேண்டும்.மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *