வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 தமிழ் வைத்தியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் கடிதங்கள் தனித்தனியே தமிழ் வைத்தியர்களுடைய முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த கடிதப் பிரதிகள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையில் பாதுகாப்பின்மை காரணமாக வவுனியாவிலிருந்து வெளியேறிய பெரும்பான்மை வைத்தியர்கள் அனைவரும் மீண்டும் கடமைக்குச் சமுகமளித்துள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 பொலிசாரைக் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் வைத்தியசாலை மேல் மாடியில் நிலைகொண்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதான வாசல் உட்பட வைத்தியசாலை வளவிற்குள் செல்லும் சகல வழிகளிலும் பொலிஸார் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.