ஜெனீவா சாசனத்துக்கு எதிராக இலங்கையில் போர் குற்றங்கள்; சர்வதேச சமூகம் மௌனம் -தமிழ் கூட்டமைப்பு விசனம்

ahathi.jpgயுத்தத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கடுமையான பொருளாதார, உணவு, மருத்துவ தடைகள் ஜெனீவா சாசனத்தின் பிரகாரம் போர் குற்றங்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு இனப்படுகொலையின் ஓரங்கமான கொள்கையுமாகும் என்று சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழ் கூட்டமைப்பின் பத்திரிகை அறிக்கை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; விடுதலைப்புலிகளின் பகுதிகளில் தமிழ் மக்களும் பொதுமக்களின் உள்சார் கட்டமைப்பும் குறிப்பாக ஆஸ்பத்திரிகள் வேண்டுமென்றே படிமுறையாக ஆயுத படைகளினால் இலக்கு வைக்கப்படுகின்றன. நத்தார் / புதுவருடம்/ தைப்பொங்கல் பண்டிகை காலப்பகுதியான தற்போதைய காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 17 இல் வட்டக்கச்சி பகுதியில் 4 முறை இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் அகதிகளாயினர். டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதேநாளில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை நாசமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவரும் காயமடைந்தனர். டிசம்பர் 20 இல் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புகள் நாசமடைந்தன. இதேநாளில் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும் தளபாடங்களும் அழிந்துபோயின.

டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் பலர் உயிர் தப்பினர். டிசம்பர் 27 இல் வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம் பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார். டிசம்பர் 30 இல் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது.

டிசம்பர் 31 இல் படையினர் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதலில் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில் இரு நோயாளர் காவு வாகனங்களும் 13 பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அதேநாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்பொக்கணை பகுதியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர்.

ஜெனீவா சாசனங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர் மௌனம் காத்து வருகிறது. மாறாக இலங்கைக்கு படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *