சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின. பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.
அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.