சிங்கப்பூரில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வசூலித்து மோசடி செய்த முகவர் நிலையமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் மருதானையில் முற்றுகையிட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை வெளிநாட்டு கல்வி ஆலோசகர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்த மேலும் இருவரையும் அண்மையில் குருணாகலையில் வைத்து கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இற்கும் மேற்பட்டோரிடமிருந்து தலா 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் இவர்கள் வசூலித்திருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட எமது அதிகாரிகள் அங்கு பணியகத்தினால் அங்கீகரிக்கப்படாத பல துறைளுக்கு வேலை பெற்றுத் தருவதாக கூறி எழுதப்பட்டிருந்த போலி ஆவணங்கள் மற்றும் 60 இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் என்பவற்றை அங்கிருந்து மீட்டிருப்பதாகவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.