அன்னதானக்கந்தனின் கோயிலில் அன்னதானத்துக்கும் தாகசாந்திக்கும் தடை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

இதனால் நேற்று (27) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன.

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றில் இருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பருத்தித்துறை பிரதேச செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்த வகையில் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துவருதல் கட்டாயமானதாகும். இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும்.

சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும். கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

தாகசாந்தி, அன்னதானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி. விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *