இந்திய பிரதமர் நரேந்திரமோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாஷிங்டனில் பத்திரிகையாளர்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் பேசும்போது, “ பிரதமர் நரேந்திரமோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார். அவர் செய்வது சுலபம் அல்ல. ஆனால் அதனை அவர் செய்து வருகிறார். இந்தியா சிறந்த தலைவரையும், சிறந்த மனிதரையும் கொண்டுள்ளது. எங்களுக்கு இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்துட் ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், நாம் ஆயுட்காலத்தில் சந்தித்திராத பேரழிவான துரோகங்களுக்குரியவர் என்பது பிடனின் வரலாறு. வரலாற்றில் தவறான பக்கத்தில் அவர் காலம் முழுதும் இருந்து வருகிறார் என்று ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதேவேளை ஜோ பிடனோ, அமெரிக்காவின் பொருளாதாரத்தை ட்ரம்ப் சரித்துவிட்டார். கொரோனா வைரஸை அவர் சரியாக கையாளவில்லை என்றும் பிடன் ட்ரம்பை விமர்சித்து வருகிறார்.
அண்மையில் அமெரிக்காவில் நிறவெறி தொடர்பான பிரச்சினை வலுவடைந்திருந்த நிலையில் அமெரிக்க வெளிநாட்டவர்களுடைய வாக்குகள் யாருக்கு கிடைக்கவுள்ளன என்ற போட்டியும் பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஜனநாயகக்கட்சி சார்பாக பிடன் ஜனாதிபதி வேட்பாளாரகவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும் போட்டியிடுவதால் அமெரிக்கா வாழ் வெளிநாட்டவர்களுடைய வாக்குகள் யாருக்கு விழப்போகின்றன என்பதே பெரிய போட்டியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாகவே ட்ரம்பின் மோடி மீதான வாழ்த்து பார்க்கப்படுகின்றது.