“தெற்கின் கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ” – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் !

“தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து அரசு செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் ‘ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் முயற்சி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகளை உண்டாக்கி நாட்டைச் சீரழிக்கத் துடிக்கும் சில பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்கு அரசு செவிசாய்ப்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. நாட்டிலுள்ள சகல இனங்களையும் சரி சமமாக மதித்து உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அரசே ஜனநாயகக் கடமையைச் செய்வித்த அப்போதைய அமைச்சர் ஒருவரைக் கேள்விக்குட்படுத்திக் கைதுசெய்ய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்த வழியேற்படுத்திக் கொடுத்தார் என்பதைக் குற்றமாகச் சுமத்தி கைதுசெய்ய முனைவது கவலையளிக்கின்றது. அரசின் இந்தச் செயலானது சிறுபான்மை மக்களை அரசிடமிருந்து வெகுவாகத் தூரமாக்கும் என்பதை அரசுக்கு எத்திவைக்க விரும்புகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இலங்கை முஸ்லிம்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் எனவும் அவர் தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *