“கோட்டாபய ராஜபக்சவின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர்” – ஐ.ம.சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் டயானா கமகே ஆதங்கம் !

“கோட்டாபய ராஜபக்சவின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர்- அவரால் எப்படி செயற்பட முடியும். அதனாலேயே 20க்கு ஆதரவாக வாக்களித்தேன்”  என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினருமான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(23.10.2020)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடிகள் குறித்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்,

அவர் மேலும் பேசுகையில்,

“கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதே போரை நிறைவு செய்தார். நகரங்களை அழகுபடுத்தினார். அவரிடம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அண்மையில் நாட்டில் நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் 250 இற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். அதற்குப் பொறுப்புக்கூற யாரும் இல்லை. காலையில் ஒருவரும் மாலையில் ஒருவரும் விசாரணைக்குச் செல்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச திறமைமிக்கவர். அவரின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு ஆற்றில் தூக்கி வீசிவிட்டு நீந்தி வரச் சொல்கின்றனர். அவர் மூழ்கப்போகின்றார். இந்தநிலையில்தான் நான் எனது வாக்கை அவருக்கு ஆதரவாகப் பயன்படுத்தினேன்.

இதே நிலைமை சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் மாற்று அணியில் இருந்திருந்தாலும் இதே முடிவையே எடுத்திருப்பேன். எனவே, 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராக கட்சி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையில்லை.

நாட்டுக்கு அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரே தேவை. அதற்காக எனது வாக்கைப் பயன்படுத்திய மன நிறைவுடன் இப்போது என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகின்றது” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *