“அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை வருகை நாட்டுக்கு பேராபத்தானது ” – எச்சரிக்கின்றது தேசிய புத்திஜீவிகள் அமைப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27.10.2020) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில்,  அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் யாருடன் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்பதை இலங்கை தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை எதிர்காலம் தொடர்பாக பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி ‘நியூஸ் இன் ஏசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச்செய்தியில் மேலும் குறிப்பிடும் போது  “28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களிடம் முகத்திற்கு நேரே சீனாவுடனான உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார். அமெரிக்கா முன்வைக்கின்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்குமாறும் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், சட்டம் மற்றும் அரசமைப்பு நாட்டின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர்.

அதேவேளை, உலகிலும் பிராந்திய அளவிலும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் எனவும் அவர்கள் மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர். இலங்கையை எப்படி ஆட்சிசெய்யவேண்டும் என்பதை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் மைக் பொம்பியோவுக்குத் தெரிவிக்கவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கையைக் கேட்டுக்கொள்ளவுள்ள மைக் பொம்பியோ இரு தரப்பு இணக்கத்துடனான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக வேறு எந்த நாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

480 மில்லியன் டொலர் எம்.சி.சி. உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கையின் அரச தலைவர்களைக் கேட்டு கொள்ளவுள்ளார். எம்.சி.சி. உடன்படிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கவேண்டும் அல்லது மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சோபா உடன்படிக்கை இலங்கையின் அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை குறித்து ஆராயப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராகக் கூட்டணியான குவாட்டுக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, 30 வருட போரிலிருந்து சமீபத்திலேயே விடுதலையாகியுள்ள இலங்கை இன்னொரு சர்வதேச மோதலின் களமாக மாறுவதை விரும்பவில்லை என மைக் பொம்பியோவிடம் நாங்கள் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளும் சுதந்திரமான நடமாட்டம் உறுதிசெய்யப்படுவதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இலங்கைத் தலைவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் முதலீடுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கையில்

முதலீடுவது வரவேற்கப்படுகின்றது. அமெரிக்கா சீனாவின் முதலீடுகளின் அளவுக்கு முதலீடு செய்யுமென்றால் அதனை வரவேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *