ஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

handcuff.jpgஊடக அடையாள அட்டை வைத்திருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையை தவறான முறையில் பயன்படுத்தி சிங்கப்பூர் செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் (22) காலை நடைபெற்றது. அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
கொழும்பு 7ல் இயங்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் மூலமாகவே இந்த ஊடக அடையாள அட்டை தனக்குக் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பிரகாஷ் சக்திவேலுப்பிள்ளை ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்துள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமையாலும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மற்றும் நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் முழுமையான விசாரணைகளுக்குப் பின்னர் இன்னும் ஓரிரு தினங்களில் முழு விபரங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளை பயங்கரவாதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முயன்று வருவதால் ஊடகவியலாளர்கள் மிகவும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், தாம் சந்திக்கும் புதிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக சந்தேகம் ஏதும் நிலவும் பட்சத்தில் ஏனையோரின் நன்மையை கருத்திற்கொண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சகல ஊடகவியலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *