“இலங்கை அரசு தமது ஏவல் படைகள் மூலமாக, தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றது” – துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு !

“இலங்கை அரசு தமது ஏவல் படைகள் மூலமாக, தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றது”  என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இம்முறை கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபமேற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன் கைதுசெய்யப்பட்டமை மற்றும் தீபமேற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கார்த்திகைத் தீபமானது தமிழ் மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் ஓர் விடயம். எமது சைவசமயத்தில் இக் கார்த்திகைத் தீபத்திற்கென ஒரு நீண்ட வரலாற்றுக் கதையே உள்ளது.

இலங்கை அரசு தமது ஏவல் படைகள் மூலமாக, தமிழர்களை தமது அடக்குமுறைகளின்கீழ் கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன், இவ்வாறான சைவசமயத்தின் வரலாற்றுத் தொன்மை மிக்க கார்த்திகைத் திருநாளை முன்னெடுக்கவிடாது தடுத்துள்ளனர்.

குறிப்பாக கார்த்திகைத் தீபம் ஏற்றியவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், தீபமேற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் தீபங்களையும், பொருட்களையும் சிதைத்த நடவடிக்கைகள் எமது மனங்களில் பாரிய வேதனையினை ஏற்படுத்தியது. இலங்கை பாதுகாப்புத் தரப்பினரின் தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.

தற்போது தமிழர்களின் மதநடவடிக்கைகளைக்கூட செய்யவிடாது தடுக்கின்ற அளவிற்கு இலங்கை அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகள் வலுத்திருக்கின்றன. தமிழர்கள் மீது இலங்கை அரசு பிரயோகிக்கும் இத்தகைய அடக்கு முறைகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சர்வதேசம் வேடிக்கை பார்க்கப்போகின்றது எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *