யாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த மாணிக்கம் பிரேமச்சந்திரன் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காலில் காயமடைந்துள்ளார்.
ஆனந்தகுமாரசாமி விடுதியில் பணியாற்றிய இவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மதிய உணவுக்காக கொக்குவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வரும் வழியில் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.