“என் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிப்பேன்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே மாவை சேனாதிராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடத்தி தலைவர், செயலாளர் பற்றிப் பேசியிருக்கின்றார். இந்த விடயங்கள் தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி பேசவேண்டும்.
அதேநேரம், அதற்கு நான் பதிலளிப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இன்றைய ஒரு பத்திரிகையில் ஆசிரியர் என்னை இழிவுபடுத்தி எழுதியதால் அதற்கு நான் பதிலளித்திருக்கிறேன்.
இன்று புத்தாண்டு. அதை எல்லோரும் கொண்டாட வேண்டும். அதேநேரம் கொரோனாவால் துன்பத்தில் இருக்கின்றனர். ஆகவே, கட்சி மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக நாளைக்கு கடிதத்தை எழுதி துன்பப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பாக எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் அறிக்கை கொடுப்பேன்.
இதேவேளை, மாநகர சபை முதல்வர் விடயத்தில் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன். கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.