“முஸ்லீம் வணிகர்களின் பிரதேசங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவது இனவாதத்தின் உச்சமாக இருக்குமோ என அச்சம் எழுகிறது ? ” – ரிசாட் பதியுதீன் கேள்வி !

“முஸ்லீம் வணிகர்களின் பிரதேசங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவது இனவாதத்தின் உச்சமாக இருக்குமோ என அச்சம் எழுகிறது ? ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சீனி இறக்குமதி மோசடி தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக பொருட்களின் விலை உயர்ந்து மக்களால் வாழ முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம் பொருட்களை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.   60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கூறினர். ஆனால், அனைத்து தகுதிகளை பெற்றிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நிமயனங்களை பெற முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கொவிட் தாக்கம் காரணமாக அட்டுலுகம பிரதேசம் 56  நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. வெயங்கல பிரதேசம் 40நாட்களாகவும் காத்தான்குடி 17நாட்களாகவும் முடக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தர்களின் தாபனங்கள் இருக்கும் பல பிரதேசங்கள், திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பகிரப்படுகின்றன. அரசாங்கத்தின் இனவாதத்தின் உச்சமாக இது இருக்குமா? என்ற அச்சமும் எமக்குள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள், இந்த நாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகம் மிகவும் வேதனையில் உள்ளது. நாட்டின் இறைமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் எமது சமூகம் பாடுபட்டுள்ள நிலையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடங்லகள் எமது கண்ணுக்கு முன்னால் எரிக்கப்படுகின்றன.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவும் எரிக்கவும் முடியுமென பல நிபுணர்கள் கூறியுள்ள போதிலும், இந்த அரசாங்கம் திட்டமிட்டு சதிசெய்து நாடகமாடுகிறது. கடந்த சனிக்கிழமை இரண்டு மாத குழந்தையை எரித்துள்ளனர். 20 நாள் குழந்தையையும் எரித்துள்ளனர். இதனால், முஸ்லிம் சமூகம் வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. வைத்தியசாலைக்கு செல்லவும் இவர்கள் அச்சமுற்றுள்ளனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *