வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டில் முதலீடு செய்ய ஏற்பாடு – ஜனாதிபதி

mahi-raja.jpgவெளி நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக முதலீடு செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கென மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் சுதந்திரதின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சகல இலங்கையர்களையும் அழைக்குமாறு பணித்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு தாம் விடுத்த கோரிக்கை அடங்கிய இறுவட்டுகளை சுதந்திரதின விழாவில் வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தீர்க்கவும், அபிவிருத்தியில் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டவர்கள் பங்குபற்றவும், அவர்களது நிதி உதவிகளாக அல்லாது முதலீடாக பெறும் நோக்கிலேயே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நாம் யுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே அபிவிருத்தி வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 17 பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் வழங்கியுள்ளோம். பெரும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுவிட்டன. கிராம வீதிகளும் கொங்கிரீட் இடப்பட்டது. இப்பொழுது கொழும்பு- யாழ்ப்பாண வீதியாக பூநகரி வீதியை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இதற்காக பூநகரி ஏரிக்கு மேலாக யாழ்ப்பாண குடாநாட்டு எல்லை வரை பாலமமைக்கவுள்ளோம். இதை ஏ9 வீதியை விட முக்கியமான வீதியாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

வெளிநாட்டவர்கள் எமது அபிவிருத்தி வேலைகளை அங்கீகரித்துள்ளனர். எமது நிதிப் பிரச்சினையை போக்குமுகமாக நான் மலேசியா, லிபியா நாடுகளுக்கு சென்றுவரவுள்ளேன். இங்குள்ள பொறியியலாளர்களது சேவை இனி பன்மடங்கு தேவை. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் இனி பலமடங்காகும். யுத்தத்திற்கு செலவிட்டதை விட பல மடங்கு அபிவிருத்திக்கு செலவிடவேண்டும். இதில் யாழ்ப்பாணம் முக்கிய இடத்தினை பெறும். நிலங்களை மட்டும் கைப்பற்றி முடிப்பதில் யுத்தம் முடிவடையாது. இனிமேல் தான் மனிதக் குண்டுகள், தற்கொலைப் போராளிகள் வெளிவருவார்கள். எனவே கவனமாகவும், பாதுகாப்புடனும் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *