“நாட்டில் அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ – அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான தரப்பினர்கள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாஹரகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது.தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் கோணத்தில் பார்க்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டனர். தேசிய பாதுகாப்பினை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொண்டார்கள்.

குறுகிய நேரத்திற்குள் 8 இடங்களில் தொடர் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதென்பது சாதாரண விடயமல்ல. யுத்த காலத்தில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏபரல் 21 குண்டுத்தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

சம்பவம் இடம் பெற்ற பின்னர் அச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதாக புலனாய்வு பிரிவினரது செயற்பாடல்ல எந்நிலையிலும் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.

ஏப்ரல் 21 நாளில் இடம் பெற்ற 8 தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

30 பேருக்கு எதிராக கொலை, அடிப்படைவாத செயற்பாட்டுக்கான திட்டமிடல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே வெகுவிரைவில் முக்கிய தரப்பினர் பலர் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

நாட்டில் தீவிரவாதம் இனியொருபோதும் தலைத்தூக்காது தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது  இயல்பான விடயம்.

எவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.அரசாங்கங்கள் மாற்றமடையலாம் ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை அரசியல் தேவைக்கேற்ப மாற்றமடைய கூடாது. அரசியல் கொள்கையை காட்டிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை உறுதியாக இருத்தல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *