ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *