அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதி முகாமாக மாறப்போகின்றது

பாதுகாப்புப் படையினர் விடுதலைப்புலிகளை முல்லைத்தீவுக் காட்டுக்குள் சிறைப்படுத்தியதாக கூறும் அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தக் காட்டுக்குள் மறைக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதிமுகாமாக மாறும் அபாயம் தெரிவதாக எச்சரித்துள்ளார். நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய, வடமத்திய மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாரம்மலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு காட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு 1500 அல்லது இரண்டாயிரம் புலிகள் ஒளிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு அந்தக் காட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் யால காட்டிலும் ஒளிந்திருக்கும் புலிகளை விரட்டியடித்து விரைவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் காட்டுக்குள் சென்று ஒளிந்திருக்க முடியும். ஆனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை காட்டுக்குள் மறைக்க முடியுமா? பங்கருக்குள் சிறைப்படுத்த முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றோம்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிச் செல்ல முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது. இன்று வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொள்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பு கிராமப்புற மக்களை பெரிதும் பாதித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை பொறுமை காக்குமாறு அன்று ஜனாதிபதி கூறினார். இன்று யுத்தம் முடிவடைந்துள்ளதாக அவரே கூறுகின்றார். அப்படியானால் மக்களுக்கு சலுகைகள், நிவாரணங்கள் பொருளாதார வளர்ச்சிக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மேலும் சிறிது காலம் இடுப்பை வரிந்து கட்டிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறுகிறார்.

ஆட்சித் திறமையற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதுவரை காலமும் யுத்தத்தின் பின்னால் மறைந்திருந்து நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வந்தார். இனியும் அவரால் இந்த ஏமாற்று நாடகத்தை மேடையேற்றிக் கொண்டிருக்க முடியாது. பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை இந்த அரசால் அதிலிருந்து மீட்டெடுக்க முடியாது. இந்த அரசிடம் அதற்கான கொள்கைத்திட்டம் கிடையாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மற்றொரு சந்தர்ப்பம் மீண்டும் உருவாகியுள்ளது. யுத்தத்தால் மட்டும் நாட்டைப் பாதுகாப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. முழுநாடும் இன்று பாரிய சவாலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தச் சவாலை நாம் வெற்றி கொண்டாக வேண்டும். அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. ஜனநாயகம் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். இதனைச் செய்யக்கூடிய, வெற்றி கொள்ளக் கூடிய ஆயுதம் மக்கள் சக்தியொன்றே ஆகும்.

இன்று நாம் இன, மத, மொழி, கட்சி பேதம் பார்த்துக் கொண்டிருக்க நாட்டின் பொது எதிரியை முறியடிக்க அனைத்து மக்கள் சக்தியும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பமாக இந்த மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். அரசு செல்லும் பாதை தவறானது என்பதைக் காட்டுவதற்கு இத் தேர்தலின போது ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும். நாட்டில் மீண்டும் நல்லாட்சியை மலரச் செய்வதற்கு வடமேல் மாகாண மக்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும். மத்திய, வடமேல் மாகாண சபைகளின் வெற்றியானது முழுநாட்டு மக்களைத் தட்டியெழுப்பக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *