“இலங் கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி படகு மூலம் முல்லைத்தீவு செல்வோம்’ என தூத்துக்கடி சட்டத்தரணிகள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் சட்டத்தரணிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரயில் மறியல் மற்றும் 7 ஆம் திகதி நடக்கும் கறுப்புக் கொடி பேரணியில் பங்கேற்பது. அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு நோக்கி செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரபு கூறுகையில்; “இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.