சர்வதேச ரீதியில் அர்ஜுனா சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம்

supreme_court.jpgஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா ரணதுங்கவை நீக்கியதன் மூலம் சர்வதேச ரீதியில் அவர் சம்பாதித்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதை பார்த்த உடனயே தெரியவருவதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஆட்சேபித்து அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே உயர் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் 25 வருட அரசியல் வாழ்க்கையின் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கு கொண்டவர்களின் உணவுப்பட்டியலுக்கான கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செலுத்த மறுத்ததையடுத்தே இடைக்கால கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து அர்ஜுனா நீக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இடைக்கால கிரிக்கெட் சபையிலிருந்து அர்ஜுனா ரணதுங்க நீக்கப்பட்டமை இயற்கை நியதிகளுக்கான நீதி மற்றும் சகல சட்டங்களுக்குமான நியமனங்களுக்கு மாறானதென அர்ஜுனா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் விளையாட்டுத்துறை அரசியல் மயமாகிவிடக் கூடாதென்ற காரணத்துக்காக தனது அமைச்சர் பதவியை துறந்த அர்ஜுனா, எந்தவொரு விளம்பரத்திலும் தோன்றாமல் இருந்ததன் மூலம் சிறந்த உதாரணத்துக்குரிய விளையாட்டு வீரராக திகழ்ந்தாரென இதன்போது சஞ்சீவ ஜயவர்தன குறிப்பிட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகேயின் நடவடிக்கையின் மூலம் அர்ஜுனா ரணதுங்க தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சம்பாதித்திருந்த நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்தது.

இதன் பிரகாரம் அர்ஜுனா ரணதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை முழுமையாக விசாரணை செய்ய அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி நடத்தவும் தீர்மானித்தது. இந்த மனு பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, அசோக டி.சில்வா, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *