அரசுக்கு எதிராக அனைவரையும் அணிதிரளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அண்மையில் இதுதொடர்பில் சஜித் பிரேமதாஸ பகிரங்க அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில் “நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்.” என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டு மக்கள் இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் சிக்கித் தவிக்க அரசே முழுக்காரணம்.
கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுத்தபோது‘போர்ட் சிட்டி’ ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாட்டை ஒரு மாதத்துக்கு மேல் முடக்காமல் அரசு இருந்தது. இதனால் நாடெங்கும் கொரோனா பரவியது. தற்போது வீட்டுக்குள்ளும் கொரோனா சென்றுள்ளது. அதனால் வீடுகளுக்குள்ளேயே மரணங்கள் அதிகரிக்கின்றன.
ஆரம்பத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதன்காரணமாக நாடு இன்று பேராபத்தைச் சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்.
அரசுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.