“இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது.” – சஜித் பிரேமதாச வலியுறுத்தல் !

“இந்த அரசாங்கம் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டு பதவி விலகுவதே சிறந்தது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

தமது கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்கிறது என்று குறிப்பிடும் வகையில் அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை அபாயம் மிக்கதாகவுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமும் பொதுஜன பெரமுனவிடமும் கேட்பதற்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசாங்கமும் அறியாத வகையில் எரிபொருள் விலையை திடீரென அதிகரிப்பதற்கு அமைச்சரொருவர் மாத்திரம் எவ்வாறு தன்னிச்சையாக தீர்மானித்தார் ? அவ்வாறு அவர் தனித்து தீர்மானமொன்றை எடுத்திருப்பாராயின் அமைச்சரவையின் ஒழுங்கு விதிகளை மீறி தனியொரு அமைச்சரால் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதியும் பிரதமரும் என்ன செய்து கொண்டிருந்தனர் ?

வழமையாக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அது அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத்தப்படும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு குறிப்பிட்டவொரு அமைச்சர் மீது மாத்திரம் குற்றம் சுமத்தப்படுகிறது ? மேலும், எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தது உண்மைக்கு புறம்பாகவா? அவ்வாறெனில் அது கற்பனை கதையா? குறித்த அமைச்சர் இவர்களுக்கு அப்பால் செயற்படுகின்றாரா?

இந்த அரசாங்கத்தால் அண்மைக் காலங்களில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல தீர்மானங்கள் மிகவும் இரகசியமாக சூட்சுமமான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திடீரென இந்த தீர்மானத்திற்கு மாத்திரம் பொதுஜன பெரமுன பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளமையானது அரசாங்கத்திற்குள் காணப்படும் பாரிய முரண்பாடுகளை வெளிப்படுத்தவில்லையா?

இவ்வாறான அறிக்கைககள் ஊடாக அரசாங்கமானது தம்மீது தவறில்லை என்று நிரூபிக்க முற்படுகிறது. எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர இதிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்க கூடாது. இந்த தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான மக்கள் குரல் தோன்றிவிட்டது. தற்போது அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *