இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைபுலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும். இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *