2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணி விடுவிப்பு !

கிளிநொச்சி – பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த காணி தொடர்ந்தும் படையினர் வசம் இருந்தது. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் குறித்த காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் உள்ள காணிகளை படையினர் படிப்படியாக கையளிப்பது வரவேற்கத்தக்கது எனவும், படையினர் வசம் உள்ள மேலும் சில காணிகளையும் விடுவிக்க படையினர் முன்வர வேண்டும் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *