கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழந்திருந்தனர்.
இன்று குறித்த சம்பவம் நடந்ததன் 15ஆவது ஆண்டு நினைவு நாளாகும். வருடாவருடம் குறித்த இடத்தில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்ட போதும் கூட இன்று படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த, பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை விதித்துள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் உள்ளிட்ட பலரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் சிலர், அங்கு வருகை தந்திருந்த போதிலும், பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த வளாகத்திற்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு, இராணுவம் மற்றும் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, செஞ்சோலை படுகொலையின் 15 ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வு தொடர்பாக தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார், நினைவேந்தலை குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவைகளை மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.