“எமது தலைவர் கருணா தூய்மையானவர்.அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. வலிந்து அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளனர்.” – சரவணமுத்து ஜெயக்குமார்

“எமது தலைவர் கருணா தூய்மையானவர்.அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. வலிந்து அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளனர்.” என  தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமது கட்சி அனைத்து மக்களிற்குமானது. வன்னி மண் போரினால் பாதிக்கப்பட்ட இரத்தபூமியாக இருக்கிறது. அந்த நிலமையை மாற்றவேண்டும். எதிர்காலத்தில் வடக்கில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக நாம் வலம் வருவோம். எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து தூய்மையானதாக இருக்கும்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக ஏனையோரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களது விடுதலை என்பது நீதிமன்றின் கைகளில் இருக்கின்றது. ஆகையால் அந்த நிலுவையில் உள்ள வழக்குகள் ஆராயப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்படுவர்.

எமது தலைவர் கருணாவாலேயே 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அன்று விடுதலை செய்யப்பட்டனர். அது அனைவரும் அறிந்ததே. எனவே அரசியல் கைதிகள் முழுவதுமாக விடுவிக்கப்படுவர் அது கண்டிப்பாக இடம்பெறும்.
எமது தலைவர் கருணா தூய்மையானவர் என்பதை தற்போது அனைவரும் புரிந்துள்ளனர்.  அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எமது தலைவனுக்கு திணிக்கப்பட்டே அந்த பட்டம் வழங்கப்பட்டது. அது தற்போது கரைந்துகொண்டு வருகின்றது. தற்போது தவறு என்ன?அது எங்கே நடந்தது என்ற விடயம் மக்களிற்கு நன்றாக தெரியும்.

அது அரசியலாக்கப்பட்டு, அரசியல் கட்சிகளிடத்தில் வேறு விடயம் இல்லாதமையால் கருணா அம்மானை துரோகியாக்கி கடந்த பத்து வருடங்களாக அரசியல் செய்தார்கள். இப்போது எமக்கான நேரம் வந்துள்ளது அதனால் நாம் களம் இறங்கியுள்ளோம். நாம் அதில் வெற்றியடைந்து மக்களின் மனதை வென்றெடுப்போம்.

தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதனுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக எமது தலைமையே தீர்மானிக்கும். எமது மக்களுக்கு தூய்மையான அரசியலை வழங்க வேண்டும் என்பதில் எமது தலைவர்  உறுதியாக இருக்கின்றார். எனவே நாம் முன்னணி வகித்து ஒரு கூட்டமைப்பினை அமைப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *