தமிழருக்காக குரல் கொடுத்த மங்கள இன்று காலமானார்!!!

மங்கள சமரவீர இன்று காலமானார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருந்த மங்கள சமரவீர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இலங்கையில் கொரோனாவிற்கு காலமான முக்கியமானவர் இவர். இவர் சென்ற வாரமே காலமானதாக தவறான செய்தி ஒன்றும் வெளியாகி இருந்தது.

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வந்த மங்கள இலங்கையின் இரு பிரதான கட்சிகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து 2020இல் கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். இவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையை ஐநா மனித உரிமை சாசன உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட வைத்ததன் மூலம், போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கிடுக்குப்பிடிக்குள் இலங்கை சிக்கியது. அதனால் மங்கள சமரவீர நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்ற அவப் பெயருக்கு மகங்கள உள்ளானார்.

மங்கள அமெரிக்க தெற்காசிய பிரிவின் பொறுப்பாளர் சமந்த பவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டு இருந்தது. சமந்தா பவருடன் மங்களவுக்கு இருந்த நெருக்கம் தற்போதைய அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

மங்கள சமரவீர கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணப்பாட்டை உடையவர். அதனால் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருந்தார். அவர் யுத்தத்திற்குப் பின் தமிழ் – சிங்கள சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி தமிழ் சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தேசபிமான இயக்கம் என்பதனை உருவாக்கி இலங்கையின் இரு பிரதான தேசியக் கட்சிகளும் – ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இறுதியாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தான் பெருமைப்படுகின்ற இரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 1981 மே 31 இரவு எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை 1990இல் சந்திரிகா குமாரதுங்கவின் சமாதான முயற்சியால், வெண்தாமரை இயக்கத்தினூடாக புனரமைத்து தமிழ் மக்களிடம் கையளிக்க உதவியது எனக் குறிப்பிட்டார். அடுத்தது இலங்கை தொலைத்தொடர்பாடலை தனியார் மயப்படுத்தி தொலைபேசி இணைப்பை அனைவரும் பெறும்வகையில் செய்தது என்றும் கூறினார்.

மங்கள சமரவீர வெளிப்படையாக பேசுவதாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *