ஜனாதிபதியால் அவசரகால நிலைமையை நாடு பூராக பிரகடனப்படுத்தியுள்ளார். இதை பயன்படுத்தி முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடைபெறும். ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியுடைய கையிற்கு சென்றடைந்துள்ளதை நாங்கள் வலுவாகக் கண்டிக்கின்றோம்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நேற்று நள்ளிரவிலிருந்து அவசரகாலநிலைமை நாடு பூராகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலே உணவுவிநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படுவதற்காக இதனை செய்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நாட்டிற்கு ஆபத்து இருந்தால் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும். இதனால்தான் பொதுமக்கள் பொதுசுகாதார அவசரகால நிலைமைக்காக ஒரு சட்டமியற்றப்படவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக சொல்லியிருந்தோம். அதற்கான தனிநபர் சட்டமூலத்தை நான் நாடாளுமன்றத்திலே பிரேரித்திருக்கின்றேன் அதனை எடுத்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது, அப்படியிருந்தும் அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற தோரணையிலே இப்பொழுது இதனை செய்திருக்கின்றார்கள்.
இதன் ஆபத்து என்னவென்றால் -இதைத் தொடர்ந்து முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடைபெறும். ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியுடைய கையிற்கு சென்றடைந்துள்ளதை நாங்கள் வலுவாகக் கண்டிக்கின்றோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.