“முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் – அது கட்சியின் முடிவு.” – சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது. சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்  கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ. கே. சிவஞானமும் பாரிய கவனம் செலுத்தினார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட்டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது, இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான்.

முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில், முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறினர்.

இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது. அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள். வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம். சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *