“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.” – இரா. சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும், இதையடுத்துக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவரும் கடந்த புதன்கிழமை கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதைத் தெளிவுபடுத்தும் வகையில் சம்பந்தன் இன்று மாலை விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கின்றார்கள். கொரோனா வைரஸின் தாக்கத்தால் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்குத் தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசமைப்பினூடாகப் பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பிரதானமான குறிக்கோளாகும். இந்த நாட்டிலே தமது பூர்வீகத்தைக் கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கும் அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீகம் மற்றும் இலங்கை அரசும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும், இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும்.

இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.ஏனைய சில விடயங்கள் தொடர்பில் ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளன. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையைப் பேணுவது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும் மாறாக அவர்களைக் குழப்பக்கூடாது.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் சமத்துவம், நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்குத் தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *