“இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும்.” – உலக வங்கி அறிக்கை !

இலங்கையில் பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு உள்ளடங்கலாக நீண்டகால அடிப்படையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு தமது மதிப்பீடுகளின்படி இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்றும் வறுமையானது 10.9 சதவீதமாக அமையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ‘இலங்கையின் வறுமை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையிலேயே’ இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றினால் மக்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் வறுமை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றியும் குறித்த அவ்வறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய 4 விடயங்கள் தொடர்பாகவும் உலக வங்கி அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி முதலாவதாக விவசாய உற்பத்திகளையும் அதன்மூலமான வருமானங்களையும் அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தற்போது கட்டமைப்பு ரீதியான நிலைமாற்றமொன்று இடம்பெற்றுவருகின்ற போதிலும், அது துரிதமானதாக இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை ஏற்றுமதியை மையப்படுத்திய வாய்ப்புக்கள் உள்ளடங்கலாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இரண்டாவதாக பின்தங்கிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையல்லாத இன்னபிற தொழில் வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவை மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக நாடளாவிய ரீதியில் தொழிற்படையின் செயற்திறனை விரிவாக்குவதற்கும் தொழிலின் தரத்தை மேம்படுத்தக்கூடியவாறான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நான்காவதாக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளடங்கலாக மனித மூலதனம்சார் காரணிகளில் முதலீடுசெய்வதன் ஊடாக இலங்கைச் சிறுவர்களின் செயற்திறனை மேம்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் பொறுளாதார வளர்ச்சியை நோக்கி நகரமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *