புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *