வரலாற்றுப் புகழ்மிக்க கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்களை தாங்கியிருந்த கட்டமைப்பு நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெக்கோ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு பிரதேசவாசிகள் பள்ளிவாசல் நிர்வாகம் உட்பட முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மினாரா அகற்றப்பட்டுள்ளமையை பள்ளிவாசலுக்குப் பொறுப்பானவர்கள் நேற்றுக் காலையே அறிந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தப்தர் ஜெய்லானி போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாசலாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களுள் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் பலவுள்ளன.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லெத்தீப் பாருக் இது தொடர்பாக சிறந்ததொரு கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்தப் பள்ளிவாசல் குறித்து இரத்தினபுரி கச்சேரியில் பணிபுரிந்த ஆங்கிலேய அரசாங்க அதிபர்கள் தமது தினக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். எச்.மூயாட்ஸ் 13 ஜனவரி 1857 இலும், எச்.வேஸ் 20 மார்ச் 1887 இலும், ஆர்.பி.ஹெலிங்கஸ் 12 பெப்ரவரி 1910 இலும் தமது தினக் குறிப்பில் ஜெய்லானி பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.
அதேபோல ஜீ.கூக்ஸன் 12 ஜனவரி 1911 இலும், ஆர்.என்.தைனி 26 மார்ச் 1914 இலும், ஜீ.எச்.கொலின்ஸ் 1922 இலும் தமது தினக் குறிப்பில் இப்பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள். இதனை விட இப்பள்ளிவாசலின் தொன்மை குறித்து இன்னும் சில வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.
இது இவ்விதமிருக்க சிறிமாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1971 இல் தான் இங்கு தாதுகோபுரம் அமைக்கப்பட்டது. அப்போது கலாசார அமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி நிசங்க விஜேரத்ன இதனை நிர்மானித்ததோடு அவர் தான் இந்தத் தாதுகோபுரத்திற்கு 2000 வருட வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார்.
21 ஜனவரி 1971 தவச பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கிரியல்ல ஞானவிமல தேரர் தெரிவிக்கையில் புதிதாக தாதுகோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொல்லியல் பிரதி ஆணையாளர் சார்ல்ஸ் கொடகும்புரவுடன் 5 தடவை இப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசீலித்ததாகவும் எனினும், அங்கு பௌத்த கலாசாரத்துக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து இதற்கு முன் அங்கு தாதுகோபுரம் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 13 செப்டம்பர் 1973 இல் தொல்லியல் திணைக்களம் 3 மொழிகளிலும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கையில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சுச் செயலாளராக இருந்த போது அவரது ஆசிர்வாதத்துடன் தடம் பதித்து இன்றும் அவரால் போசிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் தான் வெசாக் கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டும் என்ற கோசத்தை 2013 மார்ச் 17 இல் முன் வைத்தார்.
இந்தக் கோசத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் செயற்பாடுகளையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தற்போது முன்னெடுத்து வருகின்றார்.
இதன் பிரதிபலிப்பு தான் தற்போது இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தொன்மைவாய்ந்த ஜெய்லானி பள்ளிவாசல் மினாரா அழிப்பாகும். அரச தலைவர் இவ்வாறு உறுதியாகச் செயற்படுவதற்கு அவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமுகம் மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி அரச தலைவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தமையே இதற்கு காரணம்.
இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைப் பற்றி அக்கரையின்றி செயற்பட்டதன் விளைவுகனையே இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.
இந்த அரசினால் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயங்கள் நடந்தாலும் இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பன்மையைக் கொடுத்து இன்னமும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.
காபட் வீதிக்கும், ஒப்பந்தங்களுக்கும் பேரம் போகாது சமூகத்தின் பாதிப்புகள் குறித்து பேச இவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கண்ணைக் குத்தியபின் வரையப்படுகின்ற அழகிய ஓவியங்கள் எமக்கு எந்தப்பலனும் தரப்போவதில்லை. இதைப்போன்று தான் சமுகத்திதன் இருப்புக்கான ஆதாரங்களை அழித்து சிறுசிறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதால் சமுகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.