பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் !

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றபட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார். இதையடுத்து மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரைத்தனர்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வித குற்றமும் இழைக்காத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் புத்திஜீவிகளும் கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர் என்று இதன்போது அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் இப்பிரேரணைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த நிலையில், சபைக்கு சமூகமளித்திருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *