“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – பழனி திகாம்பரம் உறுதி !

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

” மலையக மக்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

இன்னும் 20 வருடங்கள் இந்த அரசை அமைக்கமுடியாது. தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியின் அழைப்பு விடுத்தனர். நம்பி சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் என சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம். 50 வருடங்கள் அரசியல் செய்தவர்களுக்கு மத்தியில் நான்கரை வருடங்களில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். உரிமை அரசியலையும் வென்றெடுத்தோம்.

மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03 ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார் திகா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *